வைபவ் சூர்யவன்ஷி திறமை வீணாகி விடும்.. பிசிசிஐ
வைபவ் சூர்யவன்ஷி திறமை வீணாகி விடும்.. பிசிசிஐ-க்கு தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டெயின் அட்வைஸ்
சென்னை: ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்துள்ள இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது அபாரமான ஆட்டத்தைப் பார்த்து வியந்துள்ள தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் டேல் ஸ்டெயின், வைபவ் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
"வைபவ் சூர்யவன்ஷி ஒரு தனி ரகம். தற்போது தென்னாப்பிரிக்காவில் 14 அல்லது 15 வயதில் இவரைப் போன்ற திறமையான வீரர் யாரும் இல்லை. அவர் உண்மையிலேயே ஒரு அதிசயமான வீரர்" என்று ஸ்டெயின் கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய ஜாம்பவான்களை விட, வைபவ் தனது கிரிக்கெட் பயணத்தின் இறுதியில் மிகப்பெரிய உயரத்தை எட்ட வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார்.
எனினும், இவரைத் தொடக்கத்திலேயே மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் கையாள வேண்டும் என்றும் ஸ்டைன் இந்திய அணி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். "அவரைச் சரியாகக் பாதுகாக்கவில்லை என்றால், அவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை இழக்க நேரிடும். அதிக பொறுப்புடன் கூடிய வெகுமதி இருக்கும் அதேவேளையில், கவனக்குறைவாக இருந்தால் திறமை வீணாகிவிடவும் வாய்ப்புள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைபவ்வின் ஆட்டம் குறித்து இதுவரை பெரிய அளவில் பகுப்பாய்வு செய்யவில்லை என்றாலும், அவரைச் சோதிக்க ஒரு வழியை ஸ்டெயின் பரிந்துரைத்துள்ளார். "ககிசோ ரபாடா எப்படித் தனது பந்துவீச்சால் தாக்குதல் நடத்துகிறாரோ, அதுபோல வைபவ்வை வேகமான மற்றும் பவுன்ஸ் பந்துகள் மூலம் சோதிக்கலாம். அவர் இன்னும் சிறுவன் என்பதால், பவுன்சர் பந்துகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது முக்கியமானது" என அவர் கூறினார்.
ஐபிஎல் தொடர் பற்றியும் ஸ்டெயின் பேசுகையில், "எந்தவொரு தொடரும் ஐபிஎல்-ன் பிரம்மாண்டத்திற்கு நிகராக முடியாது. நிதி மற்றும் வீரர்களின் தரத்தில் ஐபிஎல் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. மற்ற தொடர்கள் இரண்டாவது இடத்திற்காகத்தான் போட்டியிடுகின்றன, அதில் தவறு ஒன்றும் இல்லை" என்றார். அதேநேரம், தென்னாப்பிரிக்காவின் SA20 தொடர் வேகமாக வளர்ந்து வருவதாகவும், அங்கு விளையாட சர்வதேச வீரர்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
2027 உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் உலகிற்குத் தங்களை மீண்டும் நிரூபிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் ஸ்டெயின் நம்பிக்கை தெரிவித்தார்.