வைபவ் சூர்யவன்ஷி வயதில் சந்தேகம்.. 15 வயது பையனுக்கு இவ்ளோ பலம் எப்படி? பாகிஸ்தான் வீரர் பேச்சு
வைபவ் சூர்யவன்ஷி வயதில் சந்தேகம்.. 15 வயது பையனுக்கு இவ்ளோ பலம் எப்படி? பாகிஸ்தான் வீரர் பேச்சு
மும்பை: இந்தியாவின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயதில் சந்தேகம் இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் அகமது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் விஷமத்தனமாக பேசியுள்ளார்.
தோகாவில் நடந்த ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி 53 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 28 சிக்சர்களுடன் 204 ரன்கள் விளாசினார். வெறும் 52 பந்துகளிலேயே இரட்டை சதம் விளாசி, சர்வதேச லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த உலக சாதனையையும் படைத்தார். இவரது அதிரடி ஆட்டத்தால் 250 ரன்கள் என்ற இலக்கை இந்தியா ஏ அணி வெறும் 14.2 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது.
வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அசாத்திய திறமையை பாராட்டுவதற்குப் பதிலாக, அவரது வயதை குறை கூறி இருக்கிறார் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அகமது. அவர் வைபவ் சூர்யவன்ஷியின் இரட்டை சதம் பற்றி பேசுகையில், "வைபவ் சூர்யவன்ஷி நிச்சயம் 15 வயது சிறுவன் கிடையாது. அவருக்கு குறைந்தது 20 முதல் 21 வயது வரை இருக்கும். ஒரு சிறுவன் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் 15 வயதில் 28 சிக்சர்களை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட முடியாது. அப்படிப்பட்ட பலம் அவரது கைகளிலும் தோள்களிலும் இருக்க வாய்ப்பே இல்லை" என்றார்.
மேலும் பேசிய அவர், "அவருக்கு 15 வயது என்பதை நான் நம்ப மாட்டேன். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யுங்கள். மணிக்கட்டு எலும்பு பரிசோதனை செய்து அவரது உண்மையான வயதை கண்டறிய வேண்டும். அவர் 20 வயதை கடந்தவர்" என்று தன்வீர் அகமது கூறியுள்ளார்.
இந்திய அணியில் 15 வயது வீரர் உலக சாதனை செய்ததை ஜீரணிக்க முடியாமல், வழக்கம் போல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வயிற்றெரிச்சலில் அவதூறு பரப்பி வருவதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தன்வீர் அகமதுவை கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.