📅 Thursday, 06 August 2026 IST | ஆடி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 06, 2026 08:32 PM

வேளாண் நிதி நிலை அறிக்கை: விவசாயிகளுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும்

வேளாண் நிதி நிலை அறிக்கை: விவசாயிகளுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும்

வேளாண் நிதி நிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும், சிறுதானிய உற்பத்தி மற்றும் கொள்முதல் ஊக்கப்படுத்தும் அறிவிப்பு, பனை பாதுகாப்பு இயக்கம், வாழைக்கு முட்டுக் கொடுக்கும் திட்டம், பூச்சி மற்றும் நோய் பாதிப்பிலிருந்து தென்னையை பாதுகாக்க தென்னை டானிக் வழங்குவதுடன் தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது, வாழை, மஞ்சள், வெங்காயம், தக்காளி, மா, மிளகாய் ஆகிய விளைபொருட்கள் சேமிப்புக்கான குளிர்ப்பதன கிடங்குகள் அமைக்கப்படும், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 1000 விவசாயிகளுக்கு மானியத்துடன் வழங்கப்படும், உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும் என்றும் வாரத்திற்கு ஒரு நாள் இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனைக்கு ஒதுக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

விவசாய தொழிலாளர்

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்பது தமிழ்நாடு விவசாயிகள் போராடிப் பெற்ற உரிமை ஆகும். மின் இணைப்பு கோரி பல ஆண்டுகளாக சில லட்சம் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், ஏற்கனவே அரசு அறிவித்துள்ள விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி போதுமானது அல்ல என்று விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு இழப்பீடு

காட்டுப்பன்றி மட்டுமல்லாமல் பலவிதமான வன விலங்குகளால் பயிர்கள் பாதிக்கப்படுவது. மனித உயிரிழப்புகள் உட்பட ஏற்படுகிறது. நிதி நிலை அறிக்கையில் காட்டுப்பன்றிகளை தடுப்பதற்கு யோசனை சொல்லப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு அறிவிக்க வேண்டும்.

வலியுறுத்தல்

சட்டப்போவை தேர்தலின்போது தவெகவால் விவசாமிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிதிநிலை அறிக்கை அக்கறை செலுத்தவில்லை. குறிப்பாக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3500ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4500ம், சந்தை விலையில் சரிவு ஏற்படும்போது அதை அரசு ஈடுசெய்யும் என்பதும், விதைப்பு கால உதவியாக ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ரூ.15000 வழங்கப்படும் என்பதும். 100 சதவிகிதம் பயிர்க்காப்பீடு உத்தரவாதப்படுத்த தமிழ்நாடு அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை ஏற்படுத்துவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை உள்ளாக்கியிருக்கிறது. பெரும்பகுதியான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மை துறைக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.