📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 07, 2026 09:32 AM

வேளாண் பட்ஜெட் ஏமாற்றம் தந்ததா? மனநிறைவை கொடுத்ததா? டெல்டா விவசாயிகள் கருத்து

வேளாண் பட்ஜெட் ஏமாற்றம் தந்ததா? மனநிறைவை கொடுத்ததா? டெல்டா விவசாயிகள் கருத்து

வேளாண் பட்ஜெட் ஏமாற்றம் தந்ததா? மனநிறைவை கொடுத்ததா? டெல்டா விவசாயிகள் கருத்து

"கரும்புக்கும், நெல்லுக்கும் விலை இல்லாமல் செய்துவிட்டு, விவசாயிகளுக்கு தமிழக அரசு நாமம் போட்டுள்ளது" என விவசாயி கோவிந்தராஜ் கூறினார்.

Published : August 6, 2026 at 9:34 PM IST

தஞ்சாவூர்: தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஆக.6) தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக டெல்டாவை சேர்ந்த ஒருதரப்பு விவசாயிகளும், மனநிறைவை கொடுத்துள்ளதாக மற்றொரு தரப்பு விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.

தமிழக சட்டமன்றத்தில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண்மைக்கு என தனி பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டங்களின் அடிப்படையில் உழவர் நலன், விவசாயிகளின் வருமான உயர்வு, நீர்வளங்களை பெருக்குதல்-பாதுகாத்தல், பாசன மேலாண்மை, உயிர்ம வேளாண்மை, இயற்கை வேளாண்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அடுத்த 5 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தி 131 லட்சம் மெட்ரிக் டன் அடைய இலக்கு; இயற்கை சீற்றங்களால் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாக்கவும், தானியங்களை உலர்த்துவதற்கு நிதி ஒதுக்கீடு. என பல்வேறு அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

இருந்தபோதிலும், தாங்கள் எதிர்பார்த்த வகையில் இந்த பட்ஜெட் இல்லை என டெல்டாவை சேர்ந்த சில விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தஞ்சாவூரை சேர்ந்த கரும்பு விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில், "தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாயிகளுக்கான கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், இந்த பட்ஜெட்டில் அதுதொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை.

கொள்முதல் விலையாக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 3,500, ஊக்கத்தொகையாக ஒரு டன் கரும்புக்கு ரூ 4,500 என விவசாயிகள் கேட்ட நிலையில் அதுபற்றியும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.

கரும்புக்கும், நெல்லுக்கும் விலை இல்லாமல் செய்துவிட்டு, திருப்பதியில் பட்ஜெட்டை வைத்து சாமி கும்பிட்டு வந்து விவசாயிகளுக்கு தமிழக அரசு நாமம் போட்டுள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்" என விவசாயி கோவிந்தராஜ் கூறினார்.

விவசாயி அறிவழகன் கூறும்போது, "தமிழக அரசின் வேளாண்மை பட்ஜெட் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வேளாண் பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டத்தில் கூறிய கோரிக்கைகள் பெரும்பாலும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

தஞ்சை மாவட்டம் கொள்ளிடத்தில் நீண்டகாலமாக விவசாயிகள் கேட்டு வந்த தடுப்பணை திட்டத்திற்கு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் நம்மாழ்வார் விருது, மாவட்ட அளவில் அஞ்சலை அம்மாள் விருது, வெற்றி விவசாயி திட்டம் ஆகிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்க வகையில் உள்ளன.

அதேபோல, மும்முனை மின்சாரத்தை தொடர்ந்து வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு, மண்வள பாதுகாப்பு இயக்கம், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் சேத இழப்புகளை தடுக்கும் திட்டம் ஆகியவையும் வரவேற்கத்தக்க அறிவிப்புகள்தான்.

இருந்தபோதிலும், விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு பயிர்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. கடன் ரத்து அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.