வேங்கைவயல் விவகாரம் முதல் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு வரை: பேரவையில் அனல் பறந்த விவாதம்
வேங்கைவயல் விவகாரம் முதல் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு வரை: பேரவையில் அனல் பறந்த விவாதம்
வேங்கைவயலுக்கு அப்போதைய முதலமைச்சர் செல்லாதது ஏன்? என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.
Published : August 27, 2026 at 9:57 PM IST
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேங்கைவயல் முதல் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு வரை அனல் பறந்த விவாதம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (ஆக.27) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை ஆகிய துறைகளில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர்கள், திமுகவினரிடையே வேங்கைவயல் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய சீர்காழி திமுக எம்எல்ஏ செந்தில் செல்வன், "மே 10 முதல் இன்று வரை ஆதிதிராவிடர் மக்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகிறது. ஆணவக்கொலைகளுக்கு தவெக ஆட்சியில் எந்த நடவடிக்கைகளும் எடுக்க மாட்டார்கள் என சம்பவம் நடக்கிறதா? திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று சொல்லும் தமிழக வெற்றி கழகம் என்ன மாற்றம் செய்துள்ளது?" என்று கேள்வி எழுப்பினார்.
வேங்கைவயலுக்கு திமுகவினர் செல்லாதது ஏன்?
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "உண்மைக்கு புறம்பான தகவலை சொல்ல வேண்டாம். திமுக ஆட்சியில் 70 சதவீதம் குற்றங்கள், பட்டியலின மக்களுக்கு எதிராக நடந்திருக்கின்றது. குறைகள் பற்றி சொல்லாமல், மானியக் கோரிக்கையில் எம்எல்ஏ பேச வேண்டும். தவெக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சரியாக இருக்கிறது. திமுக ஆட்சியில் வேங்கைவயல் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது தெரியும்? ஏன் இதுவரை திமுகவினர் யாரும் வேங்கைவயலுக்கு செல்ல முடியவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.
வேங்கைவயலில் கைது நடவடிக்கை
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், "வேங்கைவயலுக்கு எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் போகவில்லை என்று சொல்கிறீர்கள்; ஆனால் உறுதியாக இருந்து நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளோம். திண்டுக்கல் பகுதியில் நடந்த சம்பவம் குறித்து இப்போதைய முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார்?" என்று கேள்வி எழுப்பினார்.
ஆணவப் படுகொலையை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "திமுக ஆட்சியில் கூட்டணியில் இருந்த விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வேங்கைவயல் பிரச்சனையில் மாநில காவல்துறை மீது நம்பிக்கை இல்லை, சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டனர். ஆனால் ஏன் சிபிஐ விசாரணைக்கு மாற்றவில்லை?. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு கொண்டு சென்றோம். ஆணவப் படுகொலையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் மற்றும் அரசின் நிலைப்பாடு; தவெக அரசு சாதிக்கான அரசு கிடையாது, சமத்துவத்திற்கான அரசு.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையைச் சொன்னதும் திமுகவின் சேகர்பாபு ஏன் எழுந்து நிற்கிறார் என்று தெரியவில்லை; அது அவருக்கு தான் தெரியும்" என்றார். இதனால் சட்டப்பேரவையில் சிறிதுநேரம் திமுக- தவெக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வேங்கைவயலுக்கு நானும், விசிக தலைவரும் சென்றோம்
சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், "வேங்கைவயல் சம்பவம் நடைபெற்றபோது நானும், விசிக தலைவரும், சம்பவ இடத்துக்கு சென்றோம். வேங்கைவயல் குற்ற செயலுக்கும், அந்த மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; இப்போதும் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது" என்றார்.
கருத்தை எதிர்க்கொள்ளும் இயக்கம் திமுக
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், "ஆம்ஸ்ட்ராங் என்பவரும், நானும் ஒரே பகுதியில் பிறந்து வளர்ந்தவர்கள்; சுப, துக்க நிகழ்ச்சியில் நானும், அவரும் பங்கேற்றுள்ளோம். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் யார் சம்பந்தப்பட்டாலும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மனைவியிடம் கூறினோம்; ஒரு கட்சித் தலைவரின் படுகொலையைத் திசை திருப்பக் கூடாது.
சிபிஐ விசாரணையில் உள்ளது. சிபிஐ என்ன சொன்னாலும்? ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ளும் இயக்கம் திமுக. வன்முறைக்குச் செல்லும் இயக்கம் திமுக இல்லை. பொதுப்பணித்துறை அமைச்சர் கொலை வழக்கோடு அரசியலை சேர்ப்பது நாகரிகமற்றது" என்றார்.
அரசு மீது விமர்சனம்
அமைச்சரும், சட்டப்பேரவையின் அவை முன்னவருமான செங்கோட்டையன் கூறுகையில், "மானிய கோரிக்கை மீது பேசாமல் அரசை விமர்சித்து வருகின்றனர்; அரசு எப்படி செயல்படுகின்றது என்பதை மக்கள் பார்க்கிறார்கள்" என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "கடந்த ஆட்சியில் தான் 70% குற்றம் தலித்துகளுக்கு எதிரான நடைபெற்றுள்ளது. சட்டம்- ஒழுங்கு சரியாக நடத்திக் கொண்டிருக்கிறோம்" என்றார்.
நீங்கள் செய்த மாற்றம் என்ன?
சீர்காழி திமுக எம்எல்ஏ செந்தில் செல்வன் கூறுகையில், "திமுக ஆட்சியிலும் சாதிய வன்முறைகள் நடைபெற்றது. மாற்று அரசியல் எனக் கூறிக்கொண்டு வந்த நீங்கள், மாற்றம் என்ன என்பதுதான் எனது கேள்வி?" என கேள்வி எழுப்பினார்.
பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "எந்த தலித் சகோதரர்கள், மலம் கலந்த நீரைக் குடித்தார்களோ, அவர்கள் மீது வழக்கை போட்டது உங்களுடைய ஆட்சி? அதற்கு பதில் செல்ல முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.
வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "வேங்கைவயல் சம்பவம் போல் எதுவும் நடக்கக்கூடாது; அதில் மாற்றுக் கருத்து இல்லை, புகார் அளிக்கப்பட்ட உடனேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது. சிலர் சிபிஐ விசாரிக்க வேண்டும் என வழக்கு போட்டனர். அப்போது சிபிசிஐடி தொலைத்தொடர்பு தகவல்களை ஆய்வு செய்தனர். மற்றும் டிஎன்ஏ பகுப்பாய் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் மூன்று பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்த வழக்கு மிகவும் கவனமாக கையாளப்பட்டது" என்றார்.
வழக்கு கிடப்பில் போடப்பட்டது
பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், "உண்மைக்கு மாறான விஷயத்தை கூறுகிறார். இந்த வழக்கை அரசியல் ரீதியாக முடிக்க வேண்டும் என அவர்கள் நினைத்தனர். தவறாக அணுகினார்கள் என்பதுதான் உண்மை. உண்மை குற்றவாளி யார் என்று தெரியாமல் வெளியே சென்றுவிட்டு இந்த வழக்கு தொடர்பாக எதுவும் பேசாமல் அப்படியே கிடப்பில் போட்டனர்" என்று குற்றம்சாட்டினார்.
அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய கே.என்.நேரு
பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, "நாங்கள் வழக்கை சரியாக கையாண்டு குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறோம். எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்ம், வேங்கைவயலுக்கு செல்லவில்லை என்று கூறுகிறீர்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் குடிநீர் தொட்டியில் ஆகஸ்ட் 02- ஆம் தேதி மனிதக்கழிவு கலக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு முதலமைச்சர் சென்றாரா? முதலில் அந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று முதலமைச்சருக்கு தெரியுமா? இது தொடர்பாக நடவடிக்கை ஏதாவது எடுக்கப்பட்டுள்ளதா?" என்று அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகையில், "வேங்கைவயல் விவகாரம் அரசு என்ன செய்தது என்பதுதான் இங்கு கேள்வி? சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது என்பதெல்லாம் விட்டுவிடுவோம்; மூன்று பேர் கைது செய்ததாக சொல்கிறார்களே அந்த மூன்று பேரும் பட்டியலினத்தை சார்ந்தவர்கள்; அந்த கிராமத்தில் இருக்கிறவர்கள்; இதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது இவர்கள் கூட்டணி கட்சியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் தெரியுமா? சிபிஐ விசாரிக்க வேண்டும் என கூறினார்கள். மாநில அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் கூட்டணி கட்சியினர் சிபிஐ விசாரணையைக் கேட்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது விசிக
தொடர்ந்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, "வேங்கைவயல் விவகாரம் நடந்த உடனே கூட்டணியில் இருந்தாலும், இந்த விஷயத்தை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் விசிக சார்பில் நடத்தப்பட்டது. ஆனாலும் அங்கு தலித் சகோதரர்கள் மீது பழி சுமத்தப்பட்டது; அந்த குற்றச்செயலுக்கும், அந்த மக்களுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை, இப்போதும் இது குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு இருக்கிறது" என்றார்.