📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 13, 2026 01:01 PM

‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள்’ மாநாடு! 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள்’ மாநாடு! 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

சென்னை : தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'வெற்றி தமிழ்நாடு' (Vetri Tamil Nadu) முதலீட்டு மாநாடு சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் மிகச் சிறப்பாகத் தொடங்கியது. தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உயர்மட்ட மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

மாநாட்டின் தொடக்கமாக, தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ள பல்வேறு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் குறித்த விவரங்கள் மேடையில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட எல்இடி (LED) திரையில் ஒளிபரப்பப்பட்டன. அப்போது, அந்தத் திட்டங்கள் குறித்த முக்கிய விவரங்களை முதலமைச்சர் விஜய் அவர்களிடம் அரசு அதிகாரிகள் நேரில் விளக்கிச் கூறினர்.

இன்றைய மாநாட்டில் ஒட்டுமொத்தமாக ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெற்றிகரமாகக் கையெழுத்தாகியுள்ளன. இந்த பிரம்மாண்ட முதலீடுகளின் மூலமாகத் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 1,06,998 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய மாநாட்டில் தமிழகத்தில் முதலீடு செய்வதாகக் கையெழுத்திட்டுள்ள முன்னணி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் திட்ட விவரங்கள் அனைவரையும் ஈர்த்துள்ளன. குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற ஹிந்துஜா குழுமம் (Hinduja Group) தமிழ்நாட்டில் ரூ.2,500 கோடி முதலீடு செய்யவுள்ளதுடன், இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.

எலக்ட்ரிக் வாகன (EV) தயாரிப்பில் முன்னணியில் உள்ள அல்ட்ராவயோலெட் (Ultraviolette) நிறுவனம், கிருஷ்ணகிரியில் ரூ.779 கோடி முதலீட்டில் புதிய ஆலையை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது; இதன் மூலம் சுமார் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதியாகியுள்ளது. மேலும், வணிக வாகனத் தயாரிப்பில் கோலோச்சும் டெய்ம்லர் (Daimler) நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூ.4,000 கோடி முதலீட்டில் தனது புதிய ஆலையை அமைக்கவுள்ளது.

இதுமட்டுமின்றி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களும் தமிழகத்தில் தங்களது முதலீடுகளை வாரி வழங்கியுள்ளன. அதன்படி, ஜே.கே. டயர்ஸ் (JK Tyres) நிறுவனம் ரூ.5,000 கோடியும், ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த லூகாஸ் டிவிஎஸ் (Lucas TVS) நிறுவனம் ரூ.2,500 கோடியும் முதலீடு செய்கின்றன.

கட்டுமான மற்றும் கண்ணாடி தயாரிப்பில் புகழ்பெற்ற செயின்ட் கோபைன் (Saint-Gobain) நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீட்டையும், பிரபல நிறுவனமான டைட்டன் (Titan) மற்றும் பீனிக்ஸ் கோத்தாரி ஆகிய நிறுவனங்கள் தலா ரூ.1,000 கோடி வீதமும் முதலீடு செய்யவுள்ளன. அதுமட்டுமின்றி, விண்வெளித் தொழில்நுட்பத் துறையில் முத்திரை பதித்து வரும் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனம் ரூ.250 கோடி முதலீட்டைச் செய்யவுள்ளது.