வெஸ்ட் இண்டீஸை எளிதில் வீழ்த்தியது இந்தியா; சச்சின் சாதனையை முறியடித்தார் கோலி
திருவனந்தபுரம்: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கோலி மற்றும் கேப்டன் கில்லின் சதத்தினால், இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன் பீல்டு சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கில், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேம்ப்பெல், க்ரீவ்ஸ் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 135ஐ எட்டிய போது, 62 ரன் விளாசிய கேம்ப்பெல் குல்தீப் சுழலில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு, கார்ட்டி (13) பிரசித் கிருஷ்ணா வேகத்தில் நடையை கட்டினார். சாய் ஹோப்ஸ் 12 ரன்னிலும், சிறப்பாக ஆடி சதம் அடித்த க்ரீவ்ஸ் 101 ரன்னிலும், ஆன்ட்ரூ ரன் ஏதுமின்றியும் குல்தீப் பவுலிங்கில் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் ஜாங்கோ அரைசதம் (58 ரன் நாட் அவுட்) எடுத்தார்.
இதனால், 50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன் எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும், நிதிஷ் குமார் ரெட்டி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
296 ரன் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் கில்லும், ரோகித் ஷர்மாவும் சிறப்பான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர். 32 ரன்னில் ரோகித் ஷர்மா அவுட்டானார். மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்த கேப்டன் கில்லும், விராட் கோலியும் அரைசதம் அடித்தனர்.
சிறப்பாக ஆடிய கில் 110 ரன்னில் அவர் அவுட்டானாலும், மறுமுனையில் விராட் கோலி தன்னுடைய ரன் வேட்டையை நிறுத்தவில்லை. அவர் 74 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அதன்பிறகும், சிக்சர் மழையை பொழிந்த கோலி, கடைசியில் அடுத்தடுத்து இரு சிக்சரை அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதனால், 41.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் 30ம் தேதி நடக்கிறது.
சச்சின் சாதனையை முறியடித்தார் கோலி
* அதுமட்டுமில்லாமல், ஒரு நாட்டில் அதிக ரன்களை குவித்த சச்சினின் (6,976 ரன்) சாதனையையும் கோலி முறியடித்துள்ளார். இவர் சொந்த மண்ணான இந்தியாவில் மட்டும் 6,983 ரன் எடுத்துள்ளார்.
* இந்தப் போட்டியில் கோலி 9 சிக்சர் அடித்துள்ளார். இதன் மூலம், தனது ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒரு போட்டியில் அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளார்.