விஜய் தலைமையிலான ஆட்சி 23ம் புலிகேசி ஆட்சி போல உள்ளது: டிடிவி தினகரன் விமர்சனம்
விஜய் தலைமையிலான ஆட்சி 23ம் புலிகேசி ஆட்சி போல உள்ளது: டிடிவி தினகரன் விமர்சனம்
சென்னை: விஜய் தலைமையிலான ஆட்சி 23ம் புலிகேசி ஆட்சி போல உள்ளது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்மொழி சொல்லி கொடுத்தாலும் வராது அவர்களுக்கு அடிப்படை கணித அறிவே கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.
தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு ஆதரவாக டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார். வீழ்ச்சியில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கும் கடமை எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது. தவெக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வேலைகளை அனுபவசாலிகள் செய்வார்கள். தமிழ்நாட்டின் நலன் கருதி தவெக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சியின் முதல் 100 நாள் ஆட்சி, சினிமா படம் பார்ப்பது போல் உள்ளது. 100 நாட்களாக முதலமைச்சர் விஜய் மவுன விரதம் இருக்கிறார் என விமர்சனம் செய்துள்ளார். எதார்த்தத்துக்கும் தவெக ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவெகவினரை விமர்சிப்பதே அசிங்கமாக உள்ளது; இதற்கு ஒரு முடிவு விரைவாக வரும். நிழலை பார்த்து வாக்களித்து பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இன்ஸ்டாவால் ஆட்சிக்கு வந்தவர்கள், இன்ஸ்டாவால் வீழ்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுவதுபோல அமைச்சர்களை தவறான கருத்தைப் பேச வைக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழைக் கூட சரியாக வாசிக்க தெரியாதவர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அடிப்படை கணித அறிவு கூட இல்லாமல் பேசுவது வருத்தமளிக்கிறது என்று அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.