விஜயை மிரட்டிய மார்க்கண்டேயன்.... ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்!
விஜயை மிரட்டிய மார்க்கண்டேயன்.... ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்!
முதலமைச்சர் விஜயை மிரட்டல் விடுக்கும் அளவில் பேசிய வழக்கில் எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜயை மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவதூறாகவும் பேசியிருந்தார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திமுக எம்எல்ஏ மார்கண்டேயனை போலீசார் கடந்த 20 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அதையடுத்து தனக்கு ஜாமின் வழங்கக்கோரி எம்எல்ஏ மார்க்கண்டேயன் சார்பில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் கடந்த 22-ந்தேதி தள்ளுபடி செய்தது. மீண்டும் ஜாமின் வழங்கக் கோரி மார்க்கண்டேயன் 2 வது முறையாக மனுதாக்கல் செய்தார். ஆனால் அதனையும் கடந்த 30 ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி எம்எல்ஏ மார்க்கண்டேயனின் வழக்கறிஞரான திமுகவின் சரவணன் அண்ணாதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மார்க்கண்டேயன் தினமும் தூத்துக்குடி காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது. மேலும் மார்க்கண்டேயன் எதிர்காலத்தில் மிரட்டல் விடுக்கும் தோணியில் பேசமாட்டேன் என உத்தரவாதம் அளித்து பிரமாணபத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.