விஜய்யோட அந்த படத்தில் நான் தான் நடித்திருக்கணும்.. மிஸ் பண்ணிட்டேன்.. ஐ அம் கேம் நடிகர் வருத்தம்!
சென்னை: நஹாஸ் இதயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து நடித்துள்ள ஐ அம் கேம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. துல்கர் சல்மான், கதிர், சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்ட படக்குழுவினர் வந்திருந்து படத்தை பற்றிய பல விஷயங்களை கூறினர்.
தமிழ்நாட்டுக்கு வரும் மற்ற மாநில நடிகர்கள் எல்லாமே விஜய் முதலமைச்சர் ஆன நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு மேடைகளிலும் விஜய்யை புகழ்ந்து பேசி வருகின்றனர். ராம் சரண், யஷ் உள்ளிட்ட பிரபலங்களை தொடர்ந்து தற்போது மலையாள நடிகரான ஆண்டனி வர்கீஸ் விஜய் பற்றி பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு வந்தது என்றும் தான் அதை தவறவிட்டு விட்டேன் என வருந்தி பேசியுள்ளார்.
ஆடி பாடி மகிழ்ந்த துல்கர் சல்மான்: ஐ அம் கேம் பத்திரிகையாளர் சந்திப்பில் துல்கர் சல்மான் தனக்குப் பிடித்த "மன மன மன மெண்டல் மனதில்" பாடலை பாடினார். மேலும், ஐ அம் கேம் படத்தில் இடம்பெற்ற லூசர் பாடலுக்கு நடனமாடியும் ரசிகர்களை மகிழ் வித்துள்ளார். ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என கோலிவுட் ரசிகர்களை காந்தமாக இழுத்த காந்தா ஹீரோ ஐ அம் கேம் படத்தில் ஏகப்பட்ட தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். இது பக்கா தமிழ் படம் தான் என்றும் தமிழ் ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் தனது படங்கள் நல்லா இருந்தால் ஆதரவு தந்துக் கொண்டே இருக்கிறீர்கள், இந்த படத்துக்கும் ஆதரவு தருவீர்கள் என பேசினார்.
மாஸ்டர் படத்தில் நடிக்க வேண்டியது: ஆர்டிஎக்ஸ் படத்தை இயக்கிய நஹாஸ் இதயத் தான் ஐ அம் கேம் படத்தையும் இயக்கியுள்ளார். அந்த படத்தில் நடித்த ஆண்டனி வர்கீஸுக்கு இந்த படத்திலும் அசத்தலான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் ஒரு ஹீரோ என்றே துல்கர் சல்மான் அறிமுகப்படுத்தினார். "தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் நான் தான் நடிக்க வேண்டியது, ஆனால், தான் அப்போது வேறு படத்தில் கமிட் ஆகியிருந்த நிலையில், மிஸ் பண்ணிட்டேன். இப்போ தளபதி சிஎம் ஆகிட்டாரு, இனிமேல் அவருடன் நடிக்கவே முடியாதே என ரொம்ப வருத்தமாக உள்ளது" என்றார்.
யாருடன் நடிக்க ஆசை?: விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். இனி தமிழில் யாருடன் நடிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு பதிலளித்த ஆண்டனி வர்கீஸ் அஜித் குமார் பெயரை டக்கென கூறினார். அதன் பின்னர், அஜித், ரஜினி மற்றும் சூர்யா சார் படங்களில் நடித்தால் போதும் என்று உஷாராக மற்ற முன்னணி நடிகர்கள் பெயர்களையும் கூறி கிரேட் எஸ்கேப் ஆகிவிட்டார். நாளை செப்டம்பர் 3ம் தேதி ஐ அம் கேம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.