📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 01, 2026 08:04 PM

விரைவுச்சாலையில் வாகனம் மோதி அரியவகை மான் உயிரிழப்பு

விரைவுச்சாலையில் வாகனம் மோதி அரியவகை மான் உயிரிழப்பு

ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு விரைவுச்சாலையில் வேன் ஒன்று மோதிய விபத்தில் ‘சம்பார் மான்’ ஒன்று உயிரிழந்தது.

அன்று இரவு கிட்டத்தட்ட 8.20 மணிக்கு புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் கிராஞ்சி விரைவுச்சாலையில் நேர்ந்த விபத்து குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) தெரிவித்தது.

விபத்து தொடர்பாக 68 வயது ஆண் வேன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறை மேலும் குறிப்பிட்டது.

மான் நிலத்தில் வீழ்ந்து கிடப்பதும் அதைச் சுற்றிக் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடப்பதும் டெலிகிராம் குழு ஒன்றில் பதிவேற்றப்பட்ட காணொளியில் காணப்பட்டது.

என்பார்க்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றடைந்தபோது மான் இறந்து கிடந்ததாகவும், அதன் உடல் அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும் தேசியப் பூங்காக்கள் வாரியத்தின் வனவிலங்கு நிர்வாகக் குழு இயக்குநர் ஹாவ் சூன் பெங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வேன் ஓட்டுநருக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் வாகனம் சில சேதங்களைச் சந்தித்தது.

“காட்டுப் பகுதிகளை ஒட்டியுள்ள சாலைகளில், முக்கியமாக வனவிலங்குகள் கடப்பதற்கான குறியீடுகள் உள்ள இடங்களில் வாகனங்களை ஓட்டும்போது, ஓட்டுநர்கள் வேக வரம்பிற்குள் வாகனங்களைச் செலுத்த வேண்டும். விலங்குகள் சாலையைக் கடக்கக்கூடும் என்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என்று திரு ஹாவ் கூறினார்.

காயமடைந்த வனவிலங்குகளைப் பொதுமக்கள் தாங்களாகவே கையாளக் கூடாது என்றும் திரு ஹாவ் மேலும் குறிப்பிட்டார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

2021ஆம் ஆண்டில் என்பார்க்ஸ் நடத்திய ஆய்வில், சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 15 சம்பார் மான்கள் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டது.

இருந்தபோதும், 2023ல் வெளிவந்த ஆய்வில், பல்வேறு வனப்பகுதிகளில் இம்மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கணக்கிடப்பட்டது.