📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 01, 2026 08:04 PM

நீட் தேர்வு விவகாரம்; நாடு முழுவதும் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

நீட் தேர்வு விவகாரம்; நாடு முழுவதும் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராடிய மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சராக இருந்த பா.ஜ.,வைச் சேர்ந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, தலைநகர் டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில், கரப்பான்பூச்சி கட்சியினர், ஒரு மாதத்துக்கும் மேல் போராட்டம் நடத்தினர்.

இதே போல் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். சில இடங்களில் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட மற்றும் குற்றப் பின்னணி இல்லாதவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யும்படி அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடரப்பட்டது. அதில், 'மாணவர்களின் எதிர்காலத்தை கருதி, உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உரித்தான சிறப்பு அதிகாரமான அரசியலமைப்பு சட்டப் பிரிவு - 142ஐ பயன்படுத்தி, அவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலைமை நீதிபதி அமர்வில் இக்கோரிக்கையை முன்வைத்து, மனுவை அவசரமாக விசாரிக்க கோரினார். இதை அமர்வு ஏற்றது. இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 1)தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜூலை 20ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் தொடர்பாக, நாடு முழுவதும் எந்தவொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பீஹார், மேற்குவங்கம் அசாம், மஹாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்களும் மட்டுமே மனுக்களைத் தாக்கல் செய்திருந்தபோதிலும், நாடு முழுவதும் மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாக நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இருப்பினும், கடுமையான குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பதால், ஜந்தர் மந்தர் போராட்டங்களில் கலந்துகொண்ட 2,873 நபர்கள் மீது ஒரு எப்ஐஆர் பதிவு செய்ய டில்லி போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.