நேப்பாள வெள்ளப்பெருக்கில் காணாமல் போன சிங்கப்பூரர்களின் போலி ஏஐ படங்கள் பரவல்
நேப்பாள வெள்ளப்பெருக்கில் காணாமற்போன ஒன்பது சிங்கப்பூரர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் வேளையில், அவர்களது போலியான, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிடப்பட்ட டிக்டாக் பதிவு ஒன்றில், இப்போலிப் புகைப்படங்கள் உண்மைப் புகைப்படங்களுடன் சேர்த்துப் பகிரப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பதிவு ஏற்கெனவே 140,000க்கும் அதிகமான பார்வைகளையும் கிட்டத்தட்ட 300 கருத்துகளையும் பெற்றுள்ளது.
இத்தகைய புகைப்படங்கள், நம்பகமான தகவல்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பி, மீட்புப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாக அமையக்கூடும் என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
காணாமற்போன ஒன்பது சிங்கப்பூரர்கள் ரெங்கராஜன் பிரபு, ஷாலினி தேவி எலன் சோசன், சுப்பிரமணியம் திரவியம், ராஜேஸ்வரன் அய்யாவூ, எஸ்டி லோ, கோஷ் அதிதி, எங் கிட் குயென், சுபாக்ஷி ராவ்லா, சுமித் ராவ்லா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திபெத், நேப்பாளம் ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, ஆகஸ்ட் 26 முதல் இவர்கள் தொடர்பில் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 நிலவரப்படி, பலியானோரின் எண்ணிக்கை 1,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அத்துடன், 4,000 பேர் இன்னமும் காணாமற்போயுள்ளனர்.
ரெங்கராஜன், ஷாலினி, சுப்பிரமணியம், ராஜேஸ்வரன் ஆகிய 4 பேரும் ‘லீஃப் ஹாலிடேஸ் ட்ரெக்ஸ் அண்ட் எக்ஸ்பெடிஷன்’ (Leaf Holidays Treks and Expedition) என்ற சுற்றுலா முகவை வழியே பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
ஆகஸ்ட் 28ல் அந்த நிறுவனம் இந்த நான்கு சிங்கப்பூரர்களின் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியது.
பயண ஆவணங்களை ‘ஸ்கேன்’ செய்து எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்கள் தெளிவாக இல்லை. ஆனால், சில நாள்களுக்குப் பிறகு, அந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஏஐ புகைப்படங்கள் இணையத்தில் பரவத் தொடங்கின.
ஆகஸ்ட் 31 டிக்டாக் பதிவில், லோ, ராவ்லா குடும்பத்தினரின் அசல் புகைப்படங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
ஆனால், அதே பதிவில் ரெங்கராஜன், ஷாலினி, சுப்பிரமணியம், ராஜேஸ்வரன் ஆகியோரின் ஏஐ புகைப்படங்களும் சேர்க்கப்பட்டிருந்தன.
அரசு நீதிமன்றத்தில் பணியாற்றும் 40 வயதான திருவாட்டி ஷாலினி, நெற்றியில் கறுப்புப் பொட்டு வைத்திருப்பது போல் அப்படத்தில் சித்திரிக்கப்பட்டிருந்தார்.
கடப்பிதழிலிருந்து பெறப்பட்ட அவரது உண்மையான புகைப்படம் கருப்பு-வெள்ளையாக இருந்தது.
மரியாதையற்ற செயல்
தமது மனைவி ஒருபோதும் கறுப்புப் பொட்டு வைப்பதில்லை என்று திருவாட்டி ஷாலினியின் கணவரான 43 வயது திரு செல்வ கணேஷ் தெரிவித்தார்.
புகைப்படங்கள் போலியானவை என்றாலும் அது ஏற்படுத்தும் பாதிப்பு உண்மையானது என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்க அகாடமியின் உளவியல் சமூக மீள்தன்மை, மனிதநேய ஆய்வுகள் மையத்தின் தலைவர், உளவியலாளர் துர்கா நாயுடு கூறினார்.