Vishwanath and Sons Box Office: பிளாக்பஸ்டர் கொடுத்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதல் நாள் வசூல்!
சென்னை: கருப்பு படத்துக்குப் பிறகு சூர்யாவுக்கு அடுத்த பிளாக்பஸ்டர் படமாக மாறியுள்ளது விஸ்வநாத் அண்ட் சன்ஸ். முதல் நாளில் பெரிதாக தியேட்டர்கள் கிடைக்காத நிலையிலும், படத்தை பார்த்த ரசிகர்களின் மவுத் டாக் மூலமாக சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டிக்கெட் புக்கிங் நேற்று மாலை மற்றும் இரவு காட்சிகளுக்கு ஜெட் வேகத்தில் அதிகரித்தது.
வெங்கி அட்லூரி சூர்யாவை வைத்து குடும்ப ரசிகர்கள் பார்க்கக் கூடிய ஃபீல் குட் படமாகவே இந்த படத்தைக் கொடுத்துள்ளார். முதல் பாதியே ஒரு நல்ல படத்தை பார்த்த உணர்வை ரசிகர்களுக்கு கொடுத்து விடுகிறது. 2வது பாதியில் சில டீவியேஷன்கள் இருந்தாலும், அதுவும் படத்தை ஒன்றும் பெரிதாக பாதிக்கவில்லை.
இந்நிலையில், இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸ் வேட்டையில் விஷாலின் மகுடம் படத்தை விட சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் தான் டாப் கியரில் சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வெளியான டிசி படத்தையும் இந்த படம் முந்திவிடும் என தெரிகிறது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட்ஜெட்: சித்தாரா என்டர்டெயின்மென்ட் செம ராயலாகவும், கிளாசியாகவும் இந்த படத்தை உருவாக்கியுள்ளது. அதிகபட்சமாக 120 முதல் 130 கோடி பட்ஜெட்டிலேயே இந்த படத்தை வெங்கி அட்லூரி உருவாக்கியுள்ளார் என்கின்றனர். கருப்பு படத்தை போலவே இந்த படமும் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, ஜார்ஜ் மரியம், நாசர், சுனில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
முதல் நாள் வசூல்: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் தமிழ் வெர்ஷன் மட்டும் 9.15 கோடி வசூல் செய்துள்ளது. தெலுங்கு வெர்ஷன் 6 கோடி வசூல் செய்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் 15.15 கோடி வசூலை ஒட்டுமொத்தமாக 5,034 ஷோக்கள் மூலமாக இந்த படம் வசூல் ஈட்டியுள்ளது. ஓவர்சீஸ் வசூலுடன் சேர்த்து உலகளவில் ஒட்டுமொத்தமாக முதல் நாளில் இந்த படம் 27.51 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது.
சூர்யாவுக்கு பிளாக்பஸ்டரா?: கருப்பு திரைப்படமும் முதல் நாளில் கிட்டத்தட்ட 28 கோடி அளவுக்குத்தான் உலகளவில் வசூல் ஈட்டியது. அந்த படமும் மவுத் டாக் மூலமாக ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக சென்று கருப்பசாமி ஆட்டத்தை பார்த்துக் கொண்டாடிய நிலையில், 340 கோடி வசூலை ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்தது. இந்த படத்தை சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதால் கண்டிப்பாக 200 முதல் 300 கோடி வசூலை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று சுதந்திர தினம், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் முதல் 3 நாட்களில் 100 கோடி வசூலை இந்த படம் கடந்து விடும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.