வங்கதேசத்தில் இந்து குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை
டாக்கா: வங்கதேசத்தில் இந்து குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
வங்கதேசத்தின் ரங்க்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கணபதி சக்கரவர்த்தி (65). இவரது மனைவி பிரீத்தி லதா (50). இத்தம்பதியின் மூத்த மகள் அகாமி (23). இளைய மகன் பிரியம் (12). கடந்த சில நாட்களாக அவரது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. உறவினர்கள் மொபைல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அனைவரின் மொபைல் போன்களும் அணைக்கப்பட்டு இருந்தன.
இதுகுறித்து உள்ளூர் மக்கள், உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு கணபதியின் வீட்டுக்கு சென்றனர். வெளிப்புற பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் கணபதியின் உடல் மீட்கப்பட்டது. மற்ற மூவரும் ஆங்காங்கே சடலமாக கிடந்தனர்.
இதுகுறித்து ரங்க்பூர் போலீஸ் கமிஷனர் முகமது அப்துல் மபூத் கூறியதாவது: கடந்த வியாழக்கிழமை இரவு கணபதி சக்கரவர்த்தியின் வீட்டு மாடிக்கு முக்தோ மற்றும் சித்தார்த்தா ஆகியோர் சென்று உள்ளனர். இரு இளைஞர்களும் சேர்ந்து மாடியில் போதைப் பொருளை உட்கொண்டு ஆடல், பாடலில் ஈடுபட்டு உள்ளனர். மொட்டை மாடியில் யாரோ நடமாடுவதை உணர்ந்த கணபதி தனியாக மாடிக்குச் சென்றுள்ளார். அங்கு இருவர் போதையில் மிதப்பதை பார்த்து அவர்களை கடுமையாக கண்டித்து உள்ளார்.
இருவர் கைது
இதனால் ஆத்திரமடைந்த முக்தோவும், சித்தார்த்தாவும் ஒரு துண்டால் கணபதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். கணவரின் அலறல் கேட்டு மனைவி பிரீத்தி லதா மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார்.
இரு இளைஞர்களும் சேர்ந்து, அவரையும் துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் கணபதியின் மகள், மகனையும் இதே பாணியில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தீவிர விசாரணைக்குப் பிறகு இருவரையும் கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.