📅 Thursday, 04 June 2026 IST | வைகாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business June 01, 2026 07:30 AM

வணிக சிலிண்டர் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு

வணிக சிலிண்டர் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு

அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. போரின் உச்சமாக, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், கியாஸை கொண்டு செல்லக்கூடிய கப்பல்கள் கடக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதில் இருந்து பிரச்சினை இன்னும் தலைவிரித்தாடி வருகிறது. இதில் கச்சா எண்ணெய், கியாஸை எதிர்பார்த்து இருக்கும் இந்தியா பெரும் பிரச்சினையை சந்தித்து வருகிறது. தட்டுப்பாட்டை சமாளிக்க வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் (19 கிலோ) விநியோகத்தை முதலில் குறைத்தது. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டரை (14.2 கிலோ) தடையில்லாமல் விநியோகம் செய்து வருவதாக மத்திய அரசு உரத்த சத்தத்தோடு பதிவு செய்தாலும், பல மாநிலங்களில் தட்டுப்பாடு இருக்கத்தான் செய்கிறது.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது சற்று அதிகரித்தாலும், இன்னும் முழுமையாக பயன்பாட்டாளர்களுக்கு சென்றடையவில்லை. தட்டுப்பாடு ஏற்படுகிறது. விலையும் உயர்த்தப்படுகிறது. விலை உயர்வால், அதனை பயன்படுத்தும் ஓட்டல் மற்றும் சிற்றுண்டி கடைக்காரர்கள் உணவுப் பொருட்களின் மீது சிலிண்டர் விலை உயர்வை கொண்டு வந்து வைக்கின்றனர். அது மக்களின் சட்டைப் பையில் கை வைக்கிறது.

சிலிண்டர் விலை உயர்வு

இப்படி இருக்கும் சூழலில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த மாதம் 990 ரூபாய் 50 காசு உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அதிர்ச்சி கொடுத்தன. இதன்படி ஒரு சிலிண்டர் விலை ரூ.3 ஆயிரத்து 237-க்கு விற்பனையாகி வந்தது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்யும். அந்த வகையில் இன்றும் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.46 உயர்ந்து ரூ.3,283 ஆக உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.928.50 ஆக விற்பனையாகிறது.