வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது!
கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை கடந்த இரண்டு மாதங்களாக குறைந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை மாற்றத்தை அறிவித்துள்ளன.
வணிக சிலிண்டர் விலை
இந்நிலையில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.200 குறைந்து ரூ.2,906க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம், 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டு, சென்னையில் ரூ.3,283-ஆக இருந்த வணிக சிலிண்டரின் விலை ரூ.3,106 ஆகக் குறைந்தது.
மேற்கு ஆசியாவில் நிலவிய உலகளாவிய எரிசக்தி விநியோகத் தட்டுப்பாடு மற்றும் போர் பதற்றங்கள் காரணமாக, கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் வணிக சிலிண்டரின் விலை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்து ரூ.3,283-ஐ எட்டியிருந்தது. தற்போதைய பதற்ற தணிவுக்குப் பிறகு, இந்த ஆண்டின் முதல் முக்கிய விலை குறைப்பாக இது பார்க்கப்படுகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர்
பொதுமக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இன்றி, அது ரூ.957.50 என்ற பழைய விலையிலேயே நீடிக்கிறது.
இந்த விலை குறைப்பு உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் சிறு வணிகர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. எனினும், இதன் காரணமாக ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை குறையுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.