📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 04, 2026 03:04 AM

சிங்கப்பூர் செஞ்சிலுவை: நேப்பாள வெள்ளத்திற்கு $1 மில்லியன் திரட்டல்

சிங்கப்பூர் செஞ்சிலுவை: நேப்பாள வெள்ளத்திற்கு $1 மில்லியன் திரட்டல்

நேப்பாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு $1 மில்லியன் நிதி சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 28ஆம் தேதி நிதி திரட்டை அறிவித்த செஞ்சிலுவைச் சங்கம் வழங்கப்பட்ட நன்கொடை மூலம் மூன்று நாள்களில் அதன் இலக்கை எட்டிவிட்டது.

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) செஞ்சிலுவை இல்லத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் ரீதியான உதவியை வழங்கவும் நேப்பாளத்தில் உள்ள அன்புக்குரியவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதில் கைகொடுக்கவும் தொண்டூழியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் நவம்பர் 30ஆம் தேதிவரை நேப்பாள வெள்ள நிவாரணத்திற்குத் தொடர்ந்து நன்கொடைகளை ஏற்கும்.

“வெள்ளத்தில் சிக்கிய பலரைக் காணவில்லை. உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. மக்கள் இன்னும் தங்கள் குடும்பத்தினரைத் தேடிவருகின்றனர்,” என்றார் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைக் கழகத்தின் உளவியல், மனிதநேயக் கல்வி நிலையத்தின் தலைவர் துர்கா நாயுடு.

பலர் தமது அமைப்பைத் தொடர்புகொண்டு உதவி வழங்க முன்வந்ததை அவர் பகிர்ந்துகொண்டார்.

தற்போது பெறப்பட்ட $1 மில்லியன் நிதி, குடிநீர், போர்வைகள், தூங்குவதற்கான பாய்கள், முதலுதவிக் கருவிகள் ஆகிய அவசரகாலத் தேவைகளை வாங்க பயன்படுத்தப்படும்.

நேப்பாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 3,000க்கும் அதிகமானோரை இன்னும் காணவில்லை. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) நிலவரப்படி மரண எண்ணிக்கை கிட்டத்தட்ட 750க்கு அதிகரித்துள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

காணாமற்போனவர்களில் ஒன்பது சிங்கப்பூரர்களும் அடங்குவர். இந்தியா, அமெரிக்கா, உக்ரேன், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகியவற்றைச் சேர்ந்தவர்களையும் காணவில்லை.