25 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் மோடி: எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து
25 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் மோடி: எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து
சென்னை: அரசுப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அரசுத் தலைவராகத் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ள பிரதமர் மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். குஜராத் மாநிலம் முதல் இந்திய அரசின் தலைமைப் பொறுப்பு வரை அவர் மேற்கொண்ட இந்தச் சிறப்பான பயணம், இந்தியாவின் சமகாலப் பொதுவாழ்வில் ஒரு முக்கிய அத்தியாயமாகத் திகழ்கிறது.
பொதுச்சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கால் நூற்றாண்டு காலம், மக்களின் எதிர்பார்ப்புகள், சவால்கள் மற்றும் லட்சியங்களுடன் அவர் கொண்டுள்ள நீண்ட மற்றும் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், மாண்புமிகு பிரதமருக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரவிருக்கும் ஆண்டுகள், தேச சேவையில் அவருக்குத் தொடர்ந்து வலிமையையும் அர்ப்பணிப்பு உணர்வையும் அளிக்கட்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து,தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி குஜராத் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்று தனது நிர்வாகப் பயணத்தைத் தொடங்கிய பிரதமர் மோடிக்கு, தொடர்ந்து 25 ஆண்டுகளாக அரசின் தலைமைப் பொறுப்பில் மக்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்க சாதனையாகும். 2001 முதல் 2014 வரை குஜராத் மாநில முதலமைச்சராகவும், அதனைத் தொடர்ந்து 2014 முதல் இந்தியாவின் பிரதமராகவும் நாட்டிற்குப் பணியாற்றி வரும் அவர், தற்போது மூன்றாவது முறையாகத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் பொறுப்பை வகித்து வருகிறார்.
அரசின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இத்தருணத்தில், பிரதமர் மோடிக்கு எனது சார்பிலும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்களின் நலனுக்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் அவர் மேற்கொள்ளும் மக்கள் பணி மேலும் பல ஆண்டுகள் தொடரவும், நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து நாட்டிற்குச் சேவையாற்றவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.