📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 31, 2026 12:05 AM

$38 மி. சட்டவிரோத பணப்பரிமாற்றம்: இந்திய நாட்டவர்மீது குற்றச்சாட்டு

$38 மி. சட்டவிரோத பணப்பரிமாற்றம்: இந்திய நாட்டவர்மீது குற்றச்சாட்டு

$38 மில்லியனுக்கும் மேற்பட்ட சட்டவிரோத வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக இந்தியாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ராஜு கிருஷ்ணமூர்த்தி, 45, என்னும் அந்த ஆடவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) சுமத்தப்பட்டன.

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தொழில் நடத்திய இரு குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.

முறையான வேலை அனுமதி அட்டை இன்றி, சொந்தத் தொழில் செய்யும் வெளிநாட்டவராகச் செயல்பட்டு உரிமமற்ற பணம் அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ராஜுவுடன் இணைந்து செயல்பட்ட 33 வயது இந்திய ஆடவர் மீதும் வெள்ளிக்கிழமை குற்றம் சுமத்தப்பட இருந்தது. அவர் நீதிமன்றத்திற்கு வரத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேலை அனுமதிக்கான விண்ணப்பத்தில் பொய்யான வாக்குறுதி அளிக்க, 2024 ஜூலை 12ஆம் தேதி மாணிக்கம் சுரேஷ்குமார் என்பவருடன் இணைந்து ராஜு சதிசெய்ததாகக் கூறப்பட்டது. ‘ஸ்கை-வி என்ஜினியரிங் அண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன்’ நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராகப் பொய்யான உறுதிமொழி அளிக்கத் தூண்டியதாக ராஜு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மே மாதம் அவரது வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரகசியத் தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 8ஆம் தேதி லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள நோரிஸ் ரோட்டில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் ராஜு பிடிபட்டார். அவர் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குப் பணப் பரிமாற்றச் சேவைகளை வழங்கிவந்தது அப்போது கண்டறியப்பட்டது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தொடர்ந்து, அவரிடமிருந்து $314,000 ரொக்கம், 30 ஏடிஎம் அட்டைகள், இரு கைப்பேசிகள், பணப்பரிமாற்றப் பரிவர்த்தனைகள் தொடர்பான வெவ்வேறு குறிப்புப் புத்தகங்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

உரிமமற்ற இரண்டு பணப் பரிமாற்றச் செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது. அடையாளம் தெரியாத ஒருவர் சம்பந்தப்பட்ட ஒரு செயல்பாடும் இந்தியாவில் தமக்கு அறிமுகமான ஒருவர் மூலம் மற்றொரு செயல்பாடும் நிகழ்ந்தது விசாரணையில் தெரியவந்தது. 2024 மார்ச் முதல் 2025 ஏப்ரல் வரையில் அந்தச் செயல்பாடுகள் நிகழ்ந்தன. அவற்றின் மூலம் $38.6 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை வெளிநாடுகளுக்குச் சட்டவிரோதமாக அனுப்பப்பட்டன.

மற்றொருவரான 33 வயதான நபரும் அந்த சட்டவிரோத நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றக் கட்டமைப்பில் ஒரு தனிப்பட்ட முகவராகவும் தூதுவராகவும் அவர் செயல்பட்டது தெரியவந்தது.