51 ஆண்டுகள்.. ஒரே சூப்பர் ஸ்டார்.. 'தர்மன்' படப்பிடிப்பில் கேக் வெட்டிக் கொண்டாடிய ரஜினிகாந்த்!
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'தர்மன்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் திரையுலகில் 51 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
51 வருடப் பயணம்: 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான 'அபூர்வ ராகங்கள்' படத்தில், கோட் அணிந்து, ஸ்டைலாகச் சிகரெட் பிடித்தபடி கேட்டைத் திறந்து கொண்டு வந்த அந்த ஒரே ஒரு காட்சியிலேயே அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. அந்த ஒரே ஒரு சீன் இயக்குநர் கே.பாலசந்தரை மட்டுமில்லை ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கட்டிப்போட்டது.
வில்லன் டூ சூப்பர் ஸ்டார்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பக் காலத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். பின் படிப்படியாக முன்னேறி கதாநாயகனாக உயர்ந்து தனது தனித்துவமான நடிப்பு, ஸ்டைல், வசன உச்சரிப்பு மூலம் 51 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஆட்சி செய்து வருகிறார்.
ரஜினி - கமல் கூட்டணி: தற்போது ரஜினிகாந்த், ஓ மை கடவுளே, டிராகன் போன்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'தர்மன்' படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்டபத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. அல்லாவுதீனும் அற்புத விளக்கும் திரைப்படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட 46 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.இப்படத்தில் ரஜினிகாந்துடன் சிம்ரன், ராஷி கண்ணா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஐந்து தசாப்தங்களை கடந்து திரைத்துறையில் தொடர்ந்து பயணித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சினிமாவில் 51 ஆண்டுகளை நிறைவு செய்து இருப்பதை, 'தர்மன்' படக்குழுவினர் கெட் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த கொண்டாட்டம் படக்குழுவினர் மற்றும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.