ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி; அமைச்சர் விக்னேஷ் குற்றச்சாட்டு
கோவை: ''ஊழல் செய்ய முடியாதவர்கள், த.வெ.க., ஆட்சிக்கு கெட்ட பெயர் உண்டாக்க வேண்டும் என முயற்சிக்கின்றனர்,'' என, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் குற்றம்சாட்டினார்.
கோவை நீலாம்பூரில் அவர் அளித்த பேட்டி: மாணவர்களிடையே போதை கலாச்சாரத்தை ஒழிக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு நடத்தி வருகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். டாஸ்மாக் கடைகளின் பெயர் பலகைகளில் விழிப்புணர்வு வாசகம் இடம்பெறும்.
கடந்த ஆட்சியில் தான், மதுவிலக்கு துறையில் ஊழல் நடந்துள்ளது. இந்தத் துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். ஊழலற்ற த.வெ.க., ஆட்சியில் பணத்தால் எதுவும் செய்ய முடியாது. ஊழல் செய்ய முடியாதவர்கள், மக்களிடம் எங்கள் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த ஆட்சியில் அவதுாறுக்கும் ஆபாசங்களுக்கும் இடமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.