📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 09, 2026 09:33 AM

கடந்து வந்த பாதையை மறந்தால் இனி எங்கே போவோம் என்பதையும் மறந்துவிடுவோம்

கடந்து வந்த பாதையை மறந்தால் இனி எங்கே போவோம் என்பதையும் மறந்துவிடுவோம்

கடந்து வந்த பாதையை மறந்தால் இனி எங்கே போவோம் என்பதையும் மறந்துவிடுவோம் - கனிமொழி எம்.பி

தற்பொழுது நிறைய புத்தகங்களை பார்க்கிறோம். ஆனால், உண்மைகளை மறைக்கக் கூடிய புத்தகங்களாக, நிதர்சனங்களை சொல்லாமல் தாண்டி செல்லக்கூடிய புத்தகங்களாகத்தான் அவை இருக்கிறது என கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.

Published : August 9, 2026 at 8:12 AM IST

சென்னை: எத்தனை போராட்டங்களை தாண்டி நாம் இந்த இடத்திற்கு வந்தோம் என்பதை மறந்துவிட்டால், இனிமேல் எங்கே போவோம் என்பதை மறந்துவிடுவோம் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியமேட்டில் உள்ள விக்டோரியா பொது அரங்கத்தில் மனுராஜ் சண்முகசுந்தரம் எழுதிய 'தி பீப்பிள்ஸ் சன்க்டம்' என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர்.

அப்போது மேடையில் பேசிய எம்.பி கனிமொழி, "இப்புத்தகம் மிக முக்கியமான காலகட்டத்தில் வெளிவந்துள்ளது. இளைஞர்கள், இளம்பெண்கள் வீதிக்கு வந்து, தங்களுக்கான உரிமைகளையும், நியாயங்களையும் கேட்டதை சில நாட்களுக்கு முன்பாக கண்கூடாகப் பார்த்தோம்.

அதே நேரத்தில், இப்பொழுது தங்களது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் இளம் தலைமுறையினர், நாம் எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

எத்தனை போராட்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்தோம் என்பதை நாம் மறந்து விடுகிறோம். அதை மறந்துவிட்டால் இனிமேல் எங்கே போவோம் என்பதை மறந்து விடுவோம். ஆகையால், எத்தனையோ போராட்டங்களை சந்தித்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில், இந்த புத்தகத்தை மனு அவர்கள் வெளியிட்டிருப்பது நிச்சயமாக வரவேற்கத்தக்கது” என எழுத்தாளரை பாராட்டினார்.

தொடர்ந்து புத்தகம் குறித்து பேசிய அவர், “டெல்லியில் அர்ச்சகர்களாக பணியாற்ற பயிற்சி பெற்றவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. பல வழக்குகள் மூலம் அந்த வாய்ப்புகள் தடை செய்யப்பட்டு, நிறைவேற முடியாத ஆசையாக உருவாகியுள்ளது.

அவ்வாறு அர்ச்சகராக பயிற்சி பெற்ற பல்வேறு இளைஞர்களை அழைத்துக் கொண்டு, மனுராஜ் சண்முகசுந்தரம் என்னை நிறையமுறை சந்திக்க முயன்றார். தொடர்ந்து, என்னை சந்தித்து அந்த வழக்குகள் தொடர்பாக விவரித்தார். இதுதான் தற்பொழுது புத்தகமாக வெளிவந்துள்ளது.

முதல்முதலில் கலைஞர் எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம், ஆக வேண்டும் என்று அந்த பயிற்சிக்கான முயற்சிகளை துவக்கினார். ஆனால், எத்தனையோ தடைகளை தாண்டி, கடந்த 2021ஆம் ஆண்டுதான் அது நிறைவேறியது. இருப்பினும், அர்ச்சகராக கோயிலுக்குள் நுழைந்தவர்கள் சந்தித்த பல்வேறு இடையூறுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து உண்மையான தகவல்களை இந்த புத்தகத்தில் மனு பதிவு செய்துள்ளார்.

தற்பொழுது நிறைய புத்தகங்களை பார்க்கிறோம். ஆனால், உண்மைகளை மறைக்கக் கூடிய புத்தகங்களாக, நிதர்சனங்களை சொல்லாமல் தாண்டி செல்லக்கூடிய புத்தகங்களாகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கையில் இந்த புத்தகத்தில் உண்மையை பேசியதற்கு வாழ்த்துகள்.

சோழர்களின் முந்தைய காலகட்டத்தில் இருந்து கோயில்கள் பெரும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமே இல்லை. அது ஒரு "Seat of power"ஆக இருந்தது. கோயில்களில்தான் அந்த ஊருக்கான நியாய தர்மங்கள் சொல்லப்பட்டது. அந்த இடத்தில்தான் பிரிவினைகள் உருவாகின. கோயில்களில் இருந்துதான் அரசர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், சமூகம் எப்படி செயல்பட வேண்டும் என்ற விதிமுறைகள் எல்லாம் வகுக்கப்பட்டது.

திராவிட இயக்கம், கடவுள் நம்பிக்கை இல்லாத இயக்கம். தந்தை பெரியார் போன்றவர்கள் கடவுள் மறுப்பு கொள்கையையே தனது வாழ்க்கையின் முதன்மை கொள்கையாக கொண்டிருக்கக் கூடியவர்கள். கோயில் நுழைவு போராட்டத்தில் எவ்வளவு முதன்மையான இடத்தை பிடித்தார்கள் என்பதை இந்த புத்தகம் பதிவு செய்துள்ளது. இந்த புத்தகத்தில் வைக்கம் போராட்டத்தை முழுமையாக விவரித்துள்ளார். இந்த புத்தகம் அடுத்த தலைமுறைக்கான மிக முக்கியமான ஒரு பதிவு ஆவணம்” என்றார்.