📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 25, 2026 03:03 AM

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்- அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தகவல்

"அமைச்சரின் பேச்சை பேரவைத்தலைவர் எப்படி அனுமதித்தார் என்று தெரியவில்லை. உரிய விளக்கம் கேட்டு மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு பேரவைத்தலைவருக்கு உள்ளது" என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Published : August 24, 2026 at 8:45 PM IST

சென்னை: முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக அமைச்சர் மரிய வில்சன் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து, அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க இருப்பதாக, முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் முன்வைத்த குற்றச்சாட்டை நானும் பார்த்தேன். உயர்கல்வித்துறை சம்பந்தமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது, சம்பந்தமே இல்லாமல் நிதி அமைச்சர் உள்ளே புகுந்து குற்றச்சாட்டை தெரிவித்தார். அவர் பேசியது பொதுக்கூட்டம் அல்ல. சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.

சட்டமன்றத்தில் யார் என்ன வார்த்தை பேசினாலும் அதற்கு பேசக் கூடியவர்கள் தான் பொறுப்பாளர்கள். வெளியில் பேசுவதற்கு போடும் வழக்கு வேறு, சட்டமன்றத்தில் பேசுவதற்கு போடும் வழக்கு வேறு. அவர் கொடுத்தேன் கொடுத்தேன் என கூறுவது மிகப் பெரிய தவறு தான். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருவர், நான் சில தவறுகள் செய்ததாக ஒருவர் அவதூறு கூறினார். அவர் மீது 50 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளேன்.

கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒருவர் முறையாக பள்ளிக்கூடம் நடத்தவில்லை என்பதை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் என்னிடம் கூறினார்கள். அவர் போலியாக கையொப்பம் போட்டுள்ளார் என்றும் கூறினார்கள். அவர் மீது வழக்குப் பதியுங்கள் என்று கூறினேன். அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் அமைச்சர் பேசினாரா என்பது தெரியவில்லை.

அமைச்சர் பேசும்போது, 'நான் சொல்ல வேண்டாம் எனப் பார்த்தேன். அதற்கு நானே சாட்சி, நானே சாட்சி' எனக் கூறுகிறார். அவர் கொடுத்தது மிகப்பெரிய தவறு. எனவே அவர் மீது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் இடம் புகார் அளித்து, அவர்தான் சாட்சி என்று கூறும்போது அவரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்பதுதான் நான் வைக்கும் கோரிக்கை.

கடந்த இரண்டு நாட்களாக ஆளும் கட்சியின் கூட்டணியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க முடியும். நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறை மூலம் அடக்குமுறை கட்டவிழ்த்து விட்டதை பார்த்திருப்போம். இடதுசாரி அமைப்புகள் போராடாமல் இருக்க வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இடதுசாரி அமைப்பைச் சார்ந்தவர்கள் இந்த அரசை நடத்துவது யார் என கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

கல்லூரி நடத்தும் அமைச்சர் சம்பந்தமே இல்லாமல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவர் நடத்தும் கல்லூரியில் கேபிடேஷன் பீஸ் வாங்கிக் கொண்டு கல்லூரி நடத்துகிறார். அவர் எந்த குற்றச்சாட்டை கூறினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

சபாநாயகருக்கும் பொறுப்பு அமைச்சர் மரிய வில்சனின் பேச்சு எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. சட்டப்பேரவைத் தலைவர் எப்படி இதனை அனுமதித்தார் என்பதும் தெரியவில்லை. சட்டப்பேரவைத் தலைவர் இதனை இன்னும் நீக்கவில்லை. அதற்குரிய விளக்கத்தைக் கேட்டு மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு சட்டப்பேரவைத் தலைவருக்கு உள்ளது" என தெரிவித்தார்.