📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 25, 2026 04:00 AM

இளையோர் கவிதை மன்றம்: மின்னிலக்க உலகில் தமிழ்

இளையோர் கவிதை மன்றம்: மின்னிலக்க உலகில் தமிழ்

தமிழ்மொழி மீதான இளைய தலைமுறையினரின் ஆர்வத்தை வளர்ப்பதோடு, அவர்களின் சிந்தனைகளுக்கும் படைப்பாற்றலுக்கும் தளம் ஏற்படுத்தித் தரும் நோக்கில் கவிமாலை இளையரணி ஏற்பாடு செய்த ‘கவிதை மன்றம்’ நிகழ்வு ஆகஸ்ட் 10ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.

இளையர்களால், இளையர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு கவிதை, இலக்கியம், நாடகம், நடனம் எனப் பல்வேறு கலை வடிவங்களை ஒருங்கிணைத்து, தமிழை மரபுடன் மட்டுமல்லாமல் இன்றைய தலைமுறையின் சிந்தனைகள், நவீன உலகத்துடனும் இணைத்துப் பார்க்கும் முயற்சியாக அமைந்தது.

நிகழ்வின் சிறப்பம்சமாக 'மின்னிலக்க உலகில் தமிழ்’ என்ற தலைப்பில் கவியரங்கம் இடம்பெற்றது. தொழில்நுட்பமும் சமூக ஊடகங்களும் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட நிலையில், தமிழ்மொழி மின்னிலக்க உலகில் எவ்வாறு பயணிக்கிறது, அதன் பயன்பாட்டை இளைய தலைமுறையினர் எவ்வாறு மேலும் விரிவுபடுத்தலாம் என்பன குறித்து கவிதைகளின் வழியாக சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன.

ரகுநந்தன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் சரண்யா முசிலா, சாய் பாலாஜி, மகாலெட்சுமி மற்றும் ப்ரபவ் ஆகியோர் பங்கேற்றனர். இளம் கவிஞர்களின் பார்வையில் மின்னிலக்க உலகில் தமிழுக்கான புதிய வாய்ப்புகளும் சவால்களும் கவிதை வழியாக வெளிப்படுத்தப்பட்டன.

தொடக்கப்பள்ளி மாணவர்களான கவன் ஆத்விக், ஆதிரன், விரித்திகா, ஜெகன்நாத், சுதிக்‌ஷா ஆகியோர் சிங்கப்பூர் தலைவர்களைப் பற்றிய கவிதைகளை அவர்களைப் போன்று வேடமணிந்து, கவியுரைகளாக வழங்கினர். சிறு வயதிலிருந்தே மாணவர்கள் தமிழில் சிந்தித்து, தங்களது கருத்துகளைப் படைப்பாற்றலுடன் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே இத்தகைய முயற்சிகளின் நோக்கம்.

சிங்கப்பூரின் மூத்த தமிழ்க் கவிஞர்களைப் பற்றிய கவிதை எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் தங்களது படைப்புகளைப் பகிர்ந்துகொண்டனர்.

‘ஆர்ட்சுவிங்’ நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் திருமதி ஷர்மிளா தீபனின் பயிற்சியிலும் இயக்கத்திலும் உருவாகிய ‘மனோன்மணியம்’ குறுநாடகத்தை அவரின் மாணவர்கள் கலைநயத்துடன் வழங்கினர். மாணவர்கள் நடிப்பு, மேடை வெளிப்பாட்டின் வழியாக தமிழ் இலக்கியத்தை அணுகும் வாய்ப்பை இந்நிகழ்வு ஏற்படுத்தியது.

தமிழ்ப் பாரம்பரியக் கலைகளுக்கும் இந்நிகழ்வில் இடமளிக்கப்பட்டது. இலக்கியா, லாவண்யா இருவரும் பரதநாட்டியம் ஆடினர். சுவிதா, மரியா, யுவனா, மீனாக்ஷி, ஆதர்ஷினி ஆகியோரின் தமிழ்த் துள்ளல் நடனம் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

கவிமாலை இளையரணியின் செயல்பாடுகள், எதிர்கால நோக்கங்கள் குறித்தும் நிகழ்வில் பகிரப்பட்டது.

நிகழ்வில் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் தனபால் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கல்வி, தமிழ் வளர்ச்சியில் இளைய தலைமுறையினரின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், இளம் படைப்பாளிகளுக்கு ஊக்கமளித்தார்.

மாணவர்கள், கலைஞர்கள், போட்டி வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வு குறித்து பகிர்ந்த கவிமாலை இளையரணியின் தலைவர் ரகுநந்தன், “இந்தக் ‘கவிதை மன்றம்’ ஒருமுறை நடைபெறும் நிகழ்வாக இல்லாமல், ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்படும் நிகழ்வாக உருவாக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

“தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை அனைத்து நிலைகளிலும் உள்ள இளையர்களுக்கும் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை உருவாக்க விரும்புகிறோம். இந்த நிகழ்வு இளையர்களுக்காக மட்டுமன்று, இதன் திட்டமிடல் முதல் செயலாக்கம் வரை எங்கள் இளையரணியினரால் இணைந்து உருவாக்கப்பட்ட நிகழ்வாகும்,” என்றார்.

கவிமாலை இளையரணியின் இம்முயற்சி, தமிழைப் பாதுகாப்பது என்பது பூட்டிப் பாதுகாப்பது அல்ல. தமிழ்ப் பயன்பாட்டை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து, அவர்களின் வாழ்விலும் படைப்புகளிலும் தொடர்ந்து இயங்கச் செய்வதே என்ற எண்ணத்தை முன்னிறுத்தியது.

இளையர்களின் சிந்தனைகளில் தமிழ் தொடர்ந்து ஒலிக்கவும் அவர்களின் படைப்புகளில் தமிழ் தொடர்ந்து புதுப்பிக்கப்படவும் ஒரு தளத்தை உருவாக்கிய ‘கவிதை மன்றம்’, இளைய தலைமுறையினரின் படைப்பாற்றலையும் தமிழ்ப் பற்றையும் வெளிப்படுத்தியதுடன், எதிர்காலத்தில் மேலும் பல இளையர்களைத் தமிழ் சார்ந்த செயல்பாடுகளுக்குள் கொண்டுவரும் ஒரு தொடர்ச்சியான முயற்சிக்கான தொடக்கமாகவும் அமைந்தது.