📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 24, 2026 08:04 PM

அரிசி, பருப்பு, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு இந்திய கம்யூ. வலியுறுத்தல்

அரிசி, பருப்பு, சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு இந்திய கம்யூ. வலியுறுத்தல்

சென்னை: “அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.48-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை விலை, தற்பொழுது ரூபாய் 70 வரை விலை உயர்ந்துள்ளது. எத்தனால் தயாரிப்பிற்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து அதனால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 25 லட்சம் டன் கரும்பு எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையே இதற்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி போன்றவை நெருங்கி வரும் காலத்தில் சர்க்கரை தேவை அதிகரிக்கும். இந்நிலையில், அதன் விலை ஏற்றம் சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். சர்க்கரை விலை உயர்வால் டீ, காபி விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, வணிக நிறுவனங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. அதன் காரணமாக சாலையோர தேநீர் கடைகளில் கூட, டீ விலை 15 ரூபாய் வரை உயர்ந்தது. காபி விலை ரூ 20 வரை உயர்ந்தது . தற்போது அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

கர்நாடகத்தில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு, தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பொன்னி அரிசி ரூபாய் 80-க்கு விற்பனை ஆகிறது. இட்லி அரிசி ரூபாய் 35 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் பருப்பு வகைகளும் விலை உயர்ந்துள்ளன.

உளுத்தம் பருப்பு கிலோ ரூபாய் 120-லிருந்து 150 ஆகவும், கடலைப் பருப்பு 80-லிருந்து 100 ஆகவும், தனியா 160-லிருந்து ரூ.250 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. அதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும்.

ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது” என்று வீரபாண்டியன் கூறியுள்ளார்.