📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 14, 2026 08:03 AM

சாதித்த த.வெ.க... சர்ப்ரைஸ் தி.மு.க... உடையும் அ.தி.மு.க... இடைத்தேர்தல் ஸ்கேன் ரிப்போர்ட்!

சாதித்த த.வெ.க... சர்ப்ரைஸ் தி.மு.க... உடையும் அ.தி.மு.க... இடைத்தேர்தல் ஸ்கேன் ரிப்போர்ட்!

சாதித்த த.வெ.க... சர்ப்ரைஸ் தி.மு.க... உடையும் அ.தி.மு.க... இடைத்தேர்தல் ஸ்கேன் ரிப்போர்ட்!

“இந்த வெற்றி, முழுக்க முழுக்க முதல்வரின் இமேஜுக்கு கிடைத்த வெற்றி. அதைத் தக்கவைப்பதற்கு கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம்.

பரபரப்பாக வெளியாகியிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள், ஒவ்வொரு கட்சிக்கும் ‘ஷாக்’ ரிசல்ட்டுகளை அளித்திருக்கின்றன. ‘தி.மு.க மூன்றாவது இடம்தான் பெறும்’ என கருத்துக்கணிப்புகள் சொல்லிவந்த நிலையில், சர்ப்ரைஸாக இரண்டாவது இடத்துக்கு முன்னேறி, தன் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது தி.மு.க. சிட்டிங் தொகுதிகளைக் கைவிட்டதோடு, தன் வாக்குவங்கியையும் இழந்து பெரும் குழப்பத்தில் சிக்கியிருக்கிறது அ.தி.மு.க. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வேலுமணி, சண்முகம் டீம் போர்க்கொடி தூக்கத் தொடங்கியிருப்பதால், கட்சியே உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

அதேசமயம், இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்று தன் இமேஜைக் காப்பாற்றிக்கொண்டு விட்டதால், ‘ஹேப்பி’ மூடில் இருக்கிறார் முதல்வர் விஜய். தாராபுரத்திலேயே கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தினரின் ஓட்டுகள் அ.தி.மு.க-விடமிருந்து பிரிந்து த.வெ.க-வுக்குக் கணிசமாக வந்திருப்பது, அந்தக் கட்சிக்குப் புத்துணர்ச்சியைக் கூட்டியிருக்கிறது. அடுத்தகட்டமாக, கட்சியைக் கட்டமைக்கும் வேலைகளில் கவனம் செலுத்தச் சொல்லியிருக்கிறார் முதல்வர்.

“தமிழகத்தின் பல்ஸை எகிறவைத்திருக்கும் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன..?” களமிறங்கி விசாரித்தோம்.

விஜய் Vs உதய்... தி.மு.க-வுக்கு சர்ப்ரைஸ் வெற்றி!

இடைத்தேர்தல் ரிசல்ட்டில் பெரிதாக ஆச்சர்யமடைந்திருப்பது தி.மு.க-வினர்தான். ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல், பலமான கூட்டணி இல்லாமல், அ.தி.மு.க வென்ற தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகளோடு இரண்டாமிடம் பிடித்திருப்பதால் உத்வேகமடைந்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள் சிலர், “கடந்த பொதுத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., ஐ.யூ.எம்.எல்., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டபோதே மதுராந்தகம் தொகுதியில் மூன்றாவது இடம்தான் பெற்றோம். தாராபுரத்தில் கட்சிக் கட்டமைப்பு வலுவாக இல்லாததோடு, கவுண்டர் சமூகத்தினர் நிறைந்து வாழ்வதால், ‘அங்கே அ.தி.மு.க-வுக்குத்தான் வாய்ஸ் இருக்கும்’ என்றே நினைத்தோம். ஆனால், முடிவுகள் தலைகீழாக அமைந்திருக்கின்றன.

சிறுபான்மையினர், பட்டியல் சமூக மக்களின் ஓட்டுகளே தி.மு.க-வின் பலம். அந்த ஓட்டுகள் கணிசமாக விஜய்க்குப் போய்விடும் என்றார்கள். ஆனால், மதுராந்தகத்தில் பட்டியல் சமூக மக்கள் அடர்த்தியாக வாழும் தென்னாடு, நீர்பெயர், ஜமீன்புத்தூர் போன்ற கிராமங்களில் தி.மு.க முன்னிலை பெற்றிருக்கிறது. தாராபுரத்தில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 145, 146, 147, 148 பூத்-களில் த.வெ.க-வைவிட தி.மு.க-வுக்குக் கூடுதல் ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன. ஓ.பி.சி சமூகத்தினரும் எங்கள் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். மதுராந்தகத்தில் வன்னியர்கள் மிகுதியாக வாழும் ராமாபுரம், ரெட்டிப்பாளையம், ஒரத்தி, முதுகரை, மதுராந்தகம் ஒன்றியப் பகுதிகளிலிருந்து தி.மு.க-வுக்குக் கணிசமான ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன.

`நான் ஐந்து நிமிடம் பேசினாலே, மக்கள் கொத்து பரோட்டா போட்டுவிடுவார்கள்’ என்று சொல்லிவந்த முதல்வர், இரண்டு தொகுதிகளிலும் நான்கு நாள்கள் பிரசாரம் செய்தார். முருங்கைக்காய் பறித்தார்; டிராக்டர் ஓட்டினார்; டீ குடித்தார்; ரேக்ளா ரேஸ் வண்டியில் ஏறினார். அதோடு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் மகளிருக்குக் `கட்டணமில்லாப் பயண விரிவாக்கம்’, `தாய்மாமன் தங்க மோதிரம்’, `அண்ணன் சீர்’ போன்ற திட்டங்களை அறிவித்தார். இவ்வளவு செய்தும்கூட, தட்டுத் தடுமாறி தாராபுரத்தில் 9,000 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் த.வெ.க வென்றிருக்கிறது. விஜய்க்கு இருந்த மக்கள் ஈர்ப்பு குறையத் தொடங்கிவிட்டது. இதுவே தி.மு.க-வுக்குத் தேர்தலில் தோல்விதான். ஆனால், கட்சிரீதியில் சர்ப்ரைஸ் வெற்றிதான்.

தமிழக அரசியல் களம் ‘விஜய் Vs உதய்’ என மாறியதிலிருந்து தி.மு.க-வில் உதயநிதியின் கை ஓங்கிவிட்டது. இடைத்தேர்தல் தொகுதிகளுக்குள் முன்னாள் அமைச்சர்கள் கவனம் செலுத்தியபோதும்கூட, அதற்கு இணையாக 9 இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர்கள், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட துணைச் செயலாளர்கள் என இளைஞரணி நிர்வாகிகள் 750 பேரைக் களத்தில் இறக்கினார் உதயநிதி.

‘1 பூத்துக்கு 10 யூத்’ என்கிற அடிப்படையில் பகுதிகளைப் பிரித்துக்கொண்டு பணியாற்றினார்கள். இப்போது, கூட்டணியே வேண்டாம் என்ற சிந்தனையோடு, சுய பலத்தைக் களத்தில் நிரூபித்திருப்பதால், தி.மு.க-வைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையைத் துரிதப்படுத்தியிருக்கிறார் உதயநிதி” என்றனர் விரிவாக.

களத்தைக் கைவிட்ட அ.தி.மு.க... பர்ஸைத் திறக்காத நிர்வாகிகள்!

இடைத்தேர்தல் ரிசல்ட்டில் தி.மு.க குஷியில் திளைக்க, ரொம்பவும் அதிர்ந்துபோயிருக்கிறது அ.தி.மு.க கூடாரம். மதுராந்தகத்தில் வெற்றிபெற முடியவில்லை என்றாலும்கூட, தாராபுரத்தில் எப்படியும் ஜெயித்துவிடலாம் என்று நம்பிக்கையோடு இருந்தனர் அந்தக் கட்சியினர். வாக்கு எண்ணிகையின்போது, முதல் நான்கு ரவுண்டுகளில் அ.தி.மு.க முன்னிலை வகிக்கவும், எம்.ஜி.ஆர் மாளிகையில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். ஆனால், அடுத்தடுத்த ரவுண்டுகளில் லீட் எடுத்து, தொகுதியை வாரிச்சுருட்டிவிட்டது த.வெ.க. கொங்கு ஏரியாவிலேயே அ.தி.மு.க-வின் வாக்குவங்கி சரிவைச் சந்தித்திருப்பதால், அந்தக் கட்சிக்குள் மீண்டும் குழப்ப வெடிகள் தாறுமாறாய் வெடிக்கின்றன.

நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலர், “எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றிபெற வேண்டுமென ஆசை இருந்ததே தவிர, சரியான திட்டமிடல் இல்லை. உடல்நிலை சரியில்லாத திண்டுக்கல் சீனிவாசனை தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளராகப் போட்டதே தவறு. பூத் பிரித்ததிலும் ஏகப்பட்ட சிக்கல்கள். முன்னாள் எம்.பி திருப்பூர் சிவசாமிக்கு மட்டும் அறுபது பூத்-களை ஒதுக்கியிருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர் செல்வக்குமாருக்கு 25 பூத்-கள் ஒதுக்கப்பட்டிருந்தன. வேலுமணிக்கு வெறும் நான்கு வார்டுகளை ஒதுக்கியிருந்தார்கள். அதிலிருந்தே அவர்கள் தேர்தல் வேலை செய்த லட்சணம் தெரிந்துவிட்டது. பூத் பொறுப்பாளர்கள் யாருமே பர்ஸைத் திறக்கவில்லை.

ஆயிரம் மனக்கசப்புகள் இருந்தாலும், தேர்தல் நேரத்தில் அதைத் தள்ளிவைத்துவிட்டு வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகத்தை எடப்பாடி பழனிசாமி அரவணைத்துச் சென்றிருக்க வேண்டும். அதைச் செய்யாமல், தேர்தல் பணிக்காக சேலத்திலிருந்து ஆட்களை இறக்கினார். கடைசியில் அதுவும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. அ.தி.மு.க சார்பில் ஒரு பொதுக்கூட்டம்கூட நடக்கவில்லை. பொதுச் செயலாளரின் ரோடு ஷோவிலும் 500 பேர்தான் கலந்துகொண்டனர். ‘த.வெ.க-வுக்கும் தி.மு.க-வுக்கும்தான் போட்டி’ என்கிற தோற்றம் அப்போதே உருவாகிவிட்டது.

மதுராந்தகத்திலும் மூன்றாவது இடமே கிடைத்திருக்கிறது. காரணம், பா.ம.க வாக்குகள் இரண்டாக உடைந்து தி.மு.க-வுக்கும் த.வெ.க-வுக்கும் நகர்ந்துவிட்டன. பா.ம.க-வை அரவணைத்துச் சென்றிருந்தால், மதுராந்தகத்தில் இரண்டாவது இடத்தையாவது பிடித்திருக்கலாம். தாராபுரத்தில், கொளத்துப்பாளையத்திலுள்ள 19 பூத்-களிலும் சின்னக்காம்பாளையத்திலுள்ள 12 பூத்-களிலும் த.வெ.க அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலைக்கு வந்திருக்கிறது. கன்னிவாடியிலுள்ள ஆறு பூத்-களில், கடந்த பொதுத்தேர்தலில் 1,241 வாக்குகளைப் பெற்ற அ.தி.மு.க., இந்த இடைத்தேர்தலில் 724 வாக்குகளையே பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. தன் கோட்டையிலேயே கோட்டைவிட்டிருக்கிறது அ.தி.மு.க.

இவ்வளவுக்கும் காரணம் எடப்பாடி பழனிசாமியின் எதேச்சதிகாரம்தான். முன்னாள் அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி மடத்துக்குளம் மகேந்திரன், முன்னாள் தொகுதிப் பொறுப்பாளர் முத்து வெங்கடேஷ் போன்றவர்களை எடப்பாடி அனுசரித்து வைத்திருந்தால், அவர்கள் த.வெ.க-வுக்குச் சென்றிருக்க மாட்டார்கள். இப்போது, த.வெ.க-வும் வெற்றிபெற்றிருக்காது. இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்த சி.வி.சண்முகம், வேலுமணி டீம், கட்சியை கன்ட்ரோல் எடுப்பதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். ஏற்கெனவே 19 எம்.எல்.ஏ-க்கள் வேலுமணியுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மேலும், எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களையும் இழுத்து, 28 எம்.எல்.ஏ-க்களுடன் த.வெ.க-வுக்கு ஆதரவளிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. விரைவிலேயே அனைவரையும் ஒருங்கிணைத்து கூட்டமும் நடைபெறப்போகிறது. மொத்தத்தில் இப்போதே கட்சி பிளவுபட்ட நிலைக்குச் சென்றுவிட்டது’’ என்கிறார்கள்.

காப்பாற்றப்பட்ட இமேஜ்... சாதித்த த.வெ.க!

அதேபோல, தாராபுரம் ஒன்றியம், தாராபுரம் டவுனிலும் கணிசமான அளவில் ஓட்டுகளைப் பெற்றதாலும், மூலனூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க-வின் ஓட்டுகளை தி.மு.க வலுவாகப் பிரித்ததாலும், வெற்றிவாகை சூடியிருக்கிறது த.வெ.க. மதுராந்தகத்தில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைந்திருக்கிறார்கள். வன்னியர் ஓட்டுகள் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக ஒன்றுபட்டுத் திரளாதது, த.வெ.க-வுக்கு பலமாகவே கைகொடுத்திருக்கிறது.

இடைத்தேர்தல் ரிசல்ட்டில் பெரிதாக பாதிக்கப்பட்டிருப்பது நாம் தமிழர் கட்சிதான். அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியான நா.த.க., மதுராந்தகத்தில் 2,709 ஓட்டுகளையும், தாராபுரத்தில் 5,268 ஓட்டுகளையும் பெற்றிருக்கிறது. ‘`கூட்டணி அமைத்தால்தான் நா.த.க-வுக்கு எதிர்காலம்’’ என்கிற மனநிலைக்கு அந்தக் கட்சியினர் வந்துவிட்டனர். தனித்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட்டுகளும் தங்கள் சுய பலத்தை உணர்ந்திருப்பதால், அடுத்ததாக தி.மு.க-வை நோக்கி வேகமாக நகரத் தீர்மானித்திருக்கிறார்கள்.

வெற்றியைக் கொண்டாடும் த.வெ.க., எதிர்பாராத முன்னேற்றத்தால் உற்சாகமடைந்திருக்கும் தி.மு.க., தோல்வியால் திணறிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க என மூன்று கட்சிகளும் மூன்று திசைகளில் நிற்கின்றன. ஆனால், அரசியல் களத்தில் இன்று எழும் கைத்தட்டல்கள் நாளை கல்லெறிதலாகவும் மாறலாம்! விஜய்யின் வெற்றி நிரந்தரமா... உதயநிதியின் எழுச்சி அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு வழிவகுக்குமா... எடப்பாடியின் தலைமை தாக்குப்பிடிக்குமா... போன்றவற்றுக்கான விடைகள் இனிமேல்தான் தெரியவரும். இந்த இடைத்தேர்தல் முடிவுகள், ஏற்கெனவே இருக்கும் குழப்பங்களைத் தீர்க்கவில்லை. தமிழக அரசியலில் அடுத்த புயலுக்கு அஸ்திவாரம் போட்டிருக்கின்றன!