📅 Tuesday, 01 September 2026 IST | ஆவணி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 01, 2026 12:04 AM

செம்மஞ்சேரி ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் ரத்து இல்லை; மறுசீரமைப்பு மட்டுமே

செம்மஞ்சேரி ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் ரத்து இல்லை; மறுசீரமைப்பு மட்டுமே

செம்மஞ்சேரி ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் ரத்து இல்லை; மறுசீரமைப்பு மட்டுமே - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்

ஒரு ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட்டால் அது ஒலிம்பிக் தரத்தில் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது உரையில் குறிப்பிட்டார்.

Published : August 31, 2026 at 8:23 PM IST

சென்னை: செம்மஞ்சேரி ஸ்போர்ட்ஸ் சிட்டி முழுமையாக ரத்து செய்யப்படவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் செம்மஞ்சேரியில் 128 ஏக்கர் பரப்பளவில் ரூ.261 கோடி மதிப்பீட்டில் குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.

தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதைப் போலவே, குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, "விளையாட்டு துறைக்கான மானியக் கோரிக்கையின்போது, விளையாட்டுக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவம் குறித்தும், முதலமைச்சர் புதிய விளையாட்டுக் கொள்கையை எவ்வாறு வகுத்து வருகிறார் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தோம்.

கடந்த 100 ஆண்டுகளில் நாம் ஒலிம்பிக் பதக்கம் பெற்றதே கிடையாது. இதற்காக புதிய திட்டத்தை வகுக்க வேண்டும். அதற்கான அடிப்படை கட்டமைப்பாக 38 மாவட்டங்களிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு விடுதிகள் உருவாக்கப்பட வேண்டும். மேலும், உலகத் தரத்தில் 10 ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்பட வேண்டும்.

அதன் தொடர்ச்சியாக, சர்வதேச தரத்தில் ஒலிம்பிக் நகரத்தை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. தற்போது நிலையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. மாறாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது" என விளக்கமளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒரு ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட்டால் அது ஒலிம்பிக் தரத்தில் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அந்த வகையில் 42 வகையான விளையாட்டுகளை சர்வதேச தரத்தில் நடத்தும் வகையில் புதிய DPR தயாரிக்கப்பட்டு வருகிறது" என்றும் விளக்கமளித்தார்.

இதையடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "சென்னைக்கு அருகே 128 ஏக்கர் நிலம் கிடைத்தது சாதாரண விஷயம் அல்ல. பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே செம்மஞ்சேரி அருகே ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது” என்றார்.

மேலும், ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிடப்படவில்லை என்றும், மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.