📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 15, 2026 04:54 PM

சீனாவின் முன்னாள் பிரதமர் ‌சூ ரோங்சியின் மறைவுக்குப் பிரதமர் வோங் இரங்கல்

சீனாவின் முன்னாள் பிரதமர் ‌சூ ரோங்சியின் மறைவுக்குப் பிரதமர் வோங் இரங்கல்

சீனாவின் முன்னாள் பிரதமர் சூ ரோங்சியின் மறைவுக்கு அந்நாட்டுப் பிரதமர் லி சியாங்கிற்குச் சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரு சூ, 98ஆம் பிறந்தநாளுக்கு இரண்டு மாதங்கள் முன்னர், புதன்கிழமை (ஆகஸ்ட் 12) பெய்ஜிங்கில் காலமானதாக அரசாங்கச் செய்தி ஊடகமான சின்ஹுவா கூறியது.

ஆகஸ்ட் 13ஆம் தேதியிட்டுத் திரு லிக்கு எழுதிய கடிதத்தில் காலஞ்சென்ற திரு சூவுக்குப் பிரதமர் வோங் புகழஞ்சலி செலுத்தினார்.

பொதுச் சேவையில் திரு லி நீண்டகாலம் சிறப்புடன் பணியாற்றியதைத் திரு வோங் சுட்டினார். சீனாவின் பொருளியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதிலும் 2001ஆம் ஆண்டில் உலக வர்த்தக நிறுவனத்தில் சீனா இணைவதற்கு முன்னின்றதிலும் திரு சூ மிகச்சிறந்த தொலைநோக்குப் பார்வையையும் உறுதியையும் வெளிப்படுத்தியதாக அவர் பாராட்டினார்.

திரு சூவை ‘சிங்கப்பூரின் பழைய நண்பர்’ என்று வருணித்த பிரதமர் வோங், முன்னாள் சீனத் தலைவர் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர்கள் லீ குவான் யூ, கோ சோக் டோங் இருவரையும் பல முறை சந்தித்திருப்பதைக் குறிப்பிட்டார்.

1999ஆம் ஆண்டு ‘ஐஎஸ்இஏஎஸ்-யூசோப் இ‌ஷாக்’ கல்விக்கழகத்தில் சிங்கப்பூர் விரிவுரையை நிகழ்த்திய சீனாவின் முதல் தலைவர் திரு சூ என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

“அவரின் உரை, சீனாவின் பொருளியல் மேம்பாடும் வளர்ச்சியும் ஆசியாவுக்கும் உலகிற்கும் பயனளிக்கும் என்ற அவரின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலித்தது. பொருளியல் உறவுகளை வலுப்படுத்த ஆசியானுக்கும் சீனாவுக்கும் இடையே தடையற்ற வர்த்தக வட்டாரத்தை அமைக்கவும் பிரதமர் சூ பரிந்துரைத்திருந்தார்.

“இன்று, சிங்கப்பூருக்கும் இந்த வட்டாரத்தில் உள்ள நாடுகளுக்கும் சீனா முக்கியப் பொருளியல் பங்காளித்துவ நாடாக இருப்பதன் மூலம் அவரின் தொலைநோக்குப் பார்வை உண்மையாகியிருக்கிறது,” என்று பிரதமர் வோங் கூறினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மறைந்த திரு சூவின் தலைமையின்கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கணிசமான முன்னேற்றத்தைக் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இரு அரசாங்கங்களுக்கும் இடையிலான முதல் திட்டமான சீனா-சிங்கப்பூர் சூச்சோவ் தொழிற்பேட்டைக்குத் திரு சூ ஆரம்பக்காலத்தில் ஆதரவாளராக இருந்தார் என்பதையும் பிரதமர் வோங் சுட்டிக்காட்டினார்.