📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 15, 2026 04:54 PM

சிங்கப்பூரின் பலம்: பன்முகத்தன்மை & புதிய குடிமக்கள்

சிங்கப்பூரின் பலம்: பன்முகத்தன்மை & புதிய குடிமக்கள்

நாட்டின் பன்முகத்தன்மையும், சிங்கப்பூரர்கள் என்ற பொதுவான அடையாளத்தைக் கட்டியெழுப்பும் பகிரப்பட்ட நம்பிக்கையுமே சிங்கப்பூரை வலுவான ஒன்றாக மாற்றுகிறது என்று சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் கூறியுள்ளார்.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) நடைபெற்ற தேசிய குடியுரிமை விழாவில், ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியைச் சேர்ந்த 179 புதிய சிங்கப்பூர் குடிமக்கள் கலந்துகொண்டு நாட்டின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டோங், புதிய குடிமக்கள் தங்களது பல்வேறு பின்னணிகள், அனுபவங்கள் மாறுபட்ட சிந்தனைகள் வாயிலாக புதிய வலிமையைக் கொண்டு வருகிறார்கள் என்றார்.

“நாட்டின் பன்முகத்தன்மையை வரவேற்கிறோம். நீங்கள் வளர்ந்த இடம், உங்களது விழுமியங்கள், அனுபவங்கள் ஆகியவை மாறுபட்டிருக்கலாம். ஆனால், ஒன்றாக இணைந்து ‘சிங்கப்பூரர்கள்’ என்ற பொதுவான அடையாளத்தை உருவாக்குவதே நம்மை மேலும் வலுவாக்குகிறது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஒருவர் எங்கு பிறந்தார் அல்லது வளர்ந்தார் என்பதை விட, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்றாக உழைக்கும் எண்ணமும், சிங்கப்பூரர் என்ற பொது உணர்வுமே மிக முக்கியம் என்றும் சட்ட அமைச்சர் குறிப்பிட்டார்.

சட்டத்தின் ஆட்சியும் சமத்துவமும்

சிங்கப்பூர் தனது பன்முகத்தன்மையையும் பலசமய கலாசாரத்தையும் திறம்பட நிர்வகிப்பதற்கு நாட்டின் வலுவான ‘சட்டத்தின் ஆட்சியே’ முக்கியக் காரணம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

“இதன் பொருள் சிங்கப்பூரில் அனைவரும் சமமாகவே நடத்தப்படுகிறார்கள். நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் அல்லது உங்களது பின்னணி என்ன என்பது முக்கியமல்ல. அனைவருக்கும் ஒரே விதிதான்,” எனக் கூறிய அவர், இனம், சமயத்தை பாதுகாப்பதோடு, அவற்றின் வளர்ச்சிக்குச் சுதந்திரமான இடத்தை உருவாக்குவதும் சிங்கப்பூரின் முக்கிய அம்சம் என்றும் விவரித்தார்

மேலும், உறுதிமொழியின் முதல் வார்த்தையான “நாம்” என்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய திரு டோங், உலகளவில் இனம், சமயம், மொழி போன்றவற்றால் சமுதாயங்கள் பிளவுபட்டு வரும் சூழலில், சிங்கப்பூர் அத்தகைய பிளவுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.