‘எஸ்.ஐ.ஆர் இல்லையென்றால் த.வெ.க அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்’
‘எஸ்.ஐ.ஆர் இல்லையென்றால் த.வெ.க அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்’ - அமைச்சர் அருண்ராஜ்
எஸ்.ஐ.ஆருக்கு எதிராகப் போராடிய எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா அனைவரும் கைது செய்திருப்பது கண்டனத்துகுரியது என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
Published : October 8, 2026 at 9:41 AM IST
சென்னை: எஸ்.ஐ.ஆர் இல்லை என்றால் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளை தீபசுடர் ஏற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டுப் போட்டியில் 30 மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையில் கிரிக்கெட், வாலிபால் போன்ற விளையாட்டுகள் நடைபெற உள்ளன.
த.வெ.க அதிக இடங்களில் வென்றிருக்கும்
இதனைத் தொடர்ந்து, எஸ்.ஐ.ஆர் குறித்து முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் என்ற நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “எஸ்.ஐ.ஆர் பொறுத்தவரை தவெக தொடர்ந்து எதிர்த்துகொண்டு தான் இருக்கிறோம். அதற்கு தேர்தல் ஆணையம் உரிய பதிலை அளிக்க வேண்டும்.
தேர்தலுக்கு சில காலங்கள் இருக்கும்போதே வெளிப்படை தன்மை இல்லாமல் எஸ்.ஐ.ஆர் செய்து முடிக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர் இல்லை என்றால் அதிகமான இடங்களில் த.வெ.க வெற்றி பெற்று இருக்கும். எஸ்.ஐ.ஆருக்கு எதிராகப் போராடிய எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா அனைவரும் கைது செய்து இருப்பது கண்டனத்துகுரியது.
இந்த இடைத்தேர்தல் இரண்டு இடங்களுக்கான தேர்தல் மட்டுமல்ல. சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் இல்லை. வரலாற்றில் இல்லாத அளவில் நியாயமான தேர்தலாக நடந்துள்ளது. இருமொழிக் கொள்கையை நாங்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். அதில் எப்போதும் எந்த சமரசமும் இல்லை.
2025-ஆம் ஆண்டு கரூர் மருத்துவக் கல்லூரியின் மருந்து வழங்கும் கவரில் இந்தி மொழியும் அச்சிடப்பட்டிருந்தது. எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் அதனை நிறுத்திவிட்டோம். தி.மு.க ஆட்சியை நாங்கள் குறை சொல்ல விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
செவிலியர்களுக்கு போராட்டம்
செவிலியர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “கடந்த ஆட்சியில் செவிலியர்கள் பணியில் அமர்த்தப்படாமல் இருந்தார்கள். அப்போது பணி நிரந்தரம் கேட்டு போராடினார்கள். தற்போது பட்ஜெட் அறிவிப்பிற்கு பின்னர் உடனடியாக 4,724 செவிலியர்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பணிபுரிவதற்காக எந்தவித பணமும் பெறாமல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
செவிலியர்கள் இடைத்தேர்தலுக்கு ஒருநாளுக்கு முன்னாள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களின் கோரிக்கைகளை ஒருநாள் முன்னதாக எங்களிடம் கொடுத்தனர். அதற்கு ஒரு மாதம் ஆகியும் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருந்தால் அவர்கள் போராட்டம் அறிவித்திருக்கலாம். ஆனால், போராட்டம்தான் அவர்களின் முதல் வடிவமாக இருந்தது.
செவிலியர்களின் போராட்டத்தின்போது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அழைத்தபோது, செவிலியர்களுடன் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜும் உடன் இருப்பேன் என்று கூறியதால்தான் பேச்சுவார்த்தை காலதாமதமாக நடந்தது. பேச்சுவார்த்தையின்போது செயலாளர், நீங்கள் எங்களுக்கு கோரிக்கை அளித்திருக்கலாம்.
அதை நாங்கள் செய்யாவிட்டால், அதனைத் தொடர்ந்து நீங்கள் போராட்டம் நடத்தி இருக்கலாம் என்று கூறியதும், போராட்டக்காரர்களில் பத்தில் ஒன்பது பேர் அப்படியா இது எங்களுக்கு தெரியாது என்று வருத்தம் தெரிவித்தனர்” என்று கூறினார்.
டெங்கு காய்ச்சல்
தொடர்ந்து, புதிதாக நடிகர்கள் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், “ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் கட்சி தொடங்க உரிமை உள்ளது. மக்கள் அவர்களுக்கு தீர்ப்பு வழங்குவார்கள். மக்கள் மிகவும் அறிவார்ந்தவர்கள். முதலமைச்சர் விஜய் நடிகராக இருந்ததால் மட்டும் அவரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. விஜய் மக்களின் கொள்கை, அரசியல், மக்களின் உரிமை பேசியதால் தான் மக்கள் அவரை தேர்ந்தெடுத்தனர்” என தெரிவித்தார்.