GDN Day 6 Box Office
சென்னை: மாதவன் நடிப்பில் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜிடிஎன். இந்தியாவின் எடிசனான ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கிறார்கள். இதில் அவருடன் சத்யராஜ், துஷாரா விஜயன், பிரியாமணி, ஜான் விஜய், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் அதன் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்தியாவின் எடிசன் என்று புகழப்பட்டவர் ஜிடி நாயுடு. தமிழ்நாட்டில் வசித்த அவர்; ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளை செய்திருக்கிறார். அவரை பற்றி ஓரளவுக்கு பலருக்கு தெரிந்திருந்தாலும்; அவர் செய்த தியாகங்கள், சந்தித்த ஒடுக்குமுறைகள், துரோகங்கள் உள்ளிட்டவைகளில் பல விஷயங்கள் பொதுவெளிக்கு தெரியாமல் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் அவரது புகழை போற்றும் வகையிலும், அடுத்த தலைமுறைக்கு அவரை கொண்டு செல்லும் வகையிலும் அவர் தொடர்பான பயோபிக் ஜிடிஎன் என்கிற பெயரில் உருவாகியிருக்கிறது.
பலமான படக்குழு: ஏற்கனவே நம்பி நாராயணன், அஜித் தோவல் கதாபாத்திரங்களில் நடித்து கலக்கிய மாதவன்; இதில் ஜிடி நாயுடுவாக மாறியிருக்கிறார். அவருடன் பிரியாமணி, துஷாரா விஜயன், சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார். தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் காமெடி ரோல் செய்த நடிகர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில்தான் இப்படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு படம் தியேட்டர்களில் ரிலீஸானது.
தேறியதா படம்?: ஏற்கனவே மாதவன் கைவண்ணத்தில் வந்திருந்த ராக்கெட்ரி பயோபிக் கவனத்தை ஈர்த்திருந்தது. எனவே இதன் மீதும் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட ஆர்வம் இருந்தது. படக்குழு தரப்பில் ப்ரோமோஷன் பணிகளும் சூப்பராகவே இருந்தன. படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு தியேட்டருக்குள் சென்ற ரசிகர்களை இயக்குநரும், ஹீரோவும் ஏமாற்றவில்லை என்றே கூற வேண்டும். ஒவ்வொரு சீனிலும் மாதவனின் நடிப்பு பிரமிப்பாகவே இருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.
இயக்குநரும் சூப்பர்: பொதுவாக இதுமாதிரியான படங்களில் ஆங்காங்கே ஆவணப் பட உணர்வு வந்துவிடும். அப்படி வரும்பட்சத்தில் ரசிகர்களிடம் கனெக்ட் ஆகாமல் சொதப்பும் அபாயமும் உண்டு. ஆனால் இயக்குநரோ முழு திரைப்படத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சொதப்பாத திரைக்கதை, ஜிடி நாயுடு குறித்து இதுவரை உலகம் அறியாத பல பக்கங்கள் என தன்னால் எவ்வளவு சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முடியுமோ அப்படியே கொண்டு சென்றிருந்தார் இயக்குநர். நடிகர்களும் அவருக்கு சப்போர்ட் செய்யும் விதமாக முழு உழைப்பை படத்தில் போட்டிருக்கிறார்கள்.
வசூல் நிலவரம் என்ன?: இந்நிலையில் அப்படம் மொத்தம் ஆறு நாட்களில் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஆறாவது நாளான நேற்று தமிழில் அப்படம், 36 லட்சம் ரூபாயையும், தெலுங்கில் 3 லட்சம் ரூபாயையும் வசூலித்து இந்தியாவில் மட்டும் மொத்தம் இதுவரை 3 கோடியே 97 லட்சம் ரூபாயை அள்ளியிருக்கிறதாம். உலகளவில் மொத்தம் 4 கோடியே 46 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாக Sacnilk இணையதளம் தெரிவித்திருக்கிறது. டிசி எவ்வளவுதான் போட்டி கொடுத்தாலும் அதற்கு ஈடு கொடுத்து ஜிடிஎன்னும் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.