ஹாக்கி உலகக் கோப்பை.. இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி.. பாகிஸ்தான் போட்டியில் கடும் நெருக்கடி
ஹாக்கி உலகக் கோப்பை.. இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி.. பாகிஸ்தான் போட்டியில் கடும் நெருக்கடி
ஆம்ஸ்டெல்வீன்: 2026 உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் 'டி' பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில், இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. முதல் பாதியில் முன்னிலை பெற்றிருந்த போதிலும், இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் செய்த தவறுகளால் இந்தத் தோல்வி ஏற்பட்டது.
இந்தப் போட்டியின் முதல் கால் பகுதியில் இங்கிலாந்து அணியின் நிக்கோலஸ் பாண்டுராக் கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்திய அணி இரண்டாவது கால் பகுதியில் ஆட்டத்திற்குள் மீண்டு வந்தது. அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி 1-1 என சமநிலையை ஏற்படுத்தினார். பின்னர் தில்பிரீத் சிங் அடித்த அசத்தலான கோல் மூலம் இந்தியா 2-1 என முதல் பாதியில் முன்னிலை பெற்றது.
ஆனால், இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணி ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ரஷ்மியர் கோல் அடித்து 2-2 என சமன் செய்தார். தொடர்ந்து 44-வது நிமிடத்தில் ஹென்றி கிராஃப்ட் மற்றும் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நிக்கோலஸ் பாண்டுராக் தங்களது அணிக்கான கோல்களை அடிக்க, இங்கிலாந்து 4-2 என வெற்றியை உறுதி செய்தது. இந்திய வீரர்களின் பலவீனமான தடுப்பாட்டம் இந்தத் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
இந்தத் தோல்வியின் மூலம் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற ஆகஸ்ட் 19 அன்று நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் 2-வது சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற முடியும். இதனால் ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் நாளை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.