மதுபோதையில் மூதாட்டியைத் தாக்கிய பணிப்பெண்ணுக்குச் சிறை
புக்கிட் மேராவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடி வீட்டில், மதுபோதையில் தாம் பராமரித்து வந்த 83 வயது முதியவரைத் தாக்கிய மியன்மாரைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கு 17 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
32 வயது வை நெய் சோங், முதியவரைத் தாக்கிய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 24) அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஜூலை 28ஆம் தேதி மாலை, வீட்டின் ஒரே குடியிருப்பாளர்களான அவ்விருவரும் வீட்டில் இருந்தபோது, இரண்டு கேன் மது அருந்திவிட்டு போதையிலிருந்த பணிப்பெண், தொலைபேசியில் தமது காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இரவு 9.11 மணியளவில், கட்டிலில் படுத்திருந்த முதியவரைப் பார்த்து அவர் கத்தியுள்ளார். பின்னர், அங்கிருந்த நாற்காலியை எட்டி உதைத்ததால் அது சென்று கட்டிலின் மீது மோதியது. தொடர்ச்சியாகக் கூச்சலிட்டவாறே நாற்காலியை மீண்டும் உதைத்த அவர், முதியவரின் உலோக நடைத் தடியை தமது தலைக்கு மேலே தூக்கி வீட்டின் குறுக்கே வீசியெறிந்தார்.
தமது பாதுகாப்புக்கு அஞ்சிய முதியவர், வீட்டை விட்டு வெளியேற கதவைத் திறக்க முயன்றார். இருப்பினும், பணிப்பெண் அவரைப் பலவந்தமாகத் தள்ளிவிட்டு, கதவை வேகமாக மூடி, அவரது முதுகில் எட்டி உதைத்தார். பாதிக்கப்பட்ட முதியவர் மீண்டும் கதவைத் திறக்க முயன்றபோது, பணிப்பெண் அவரது தோள்களைப் பிடித்துக் கீழே தூக்கி வீசினார்.
இதில் முதியவரின் தலை கட்டிலில் மோதி, பின்னர் அவர் தரையில் அசைவற்றுக் கிடந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டுக்காரர் காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த முதியவருக்கு, இடது கை, கால்களில் காயங்களும் மண்டையோட்டில் உள்காயமும் ஏற்பட்டன. மிதமான மூளை இயக்கத்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு, தமது அடிப்படைத் தேவைகளுக்குப் பணிப்பெண்ணையே முழுமையாகச் சார்ந்திருந்த அந்த முதியவர் ஏறத்தாழ இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ள ஒருவரைத் தாக்கிய குற்றத்துக்காக, அதிகபட்சமாக ஆறாண்டுகள் வரை சிறைத்தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட சட்டத்தில் இடமுள்ளது.