📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 24, 2026 04:04 PM

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

மனிதவள மேம்பாட்டில் ஒத்துழைப்பது தொடர்பில் சிங்கப்பூரும் எக்வடோரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) உடன்பாடு செய்துகொண்டன.

எக்வடோர் அதிபர் டேனியல் நொபோவா அஸின் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார். அந்நாட்டு அதிபர் ஒருவர் சிங்கப்பூருக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ளது இதுவே முதன்முறை.

திறன்மேம்பாடு, தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை, பொருளியல் ஆகிய துறைகளில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதை இந்த உடன்பாடு வலுப்படுத்தும்.

இருநாடுகளும் முன்னுரிமை அளிக்கும் துறைகளில் பங்களிப்பை வலுப்படுத்த இந்த உடன்பாடு தொடக்கப் புள்ளியாக அமையும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். வணிகம், ஆட்சிமுறை, மின்னிலக்கமயமாக்கல், பொதுச் சுகாதாரம் ஆகிய துறைகளும் அவற்றில் அடங்கும்.

குட்வுட் பார்க் ஹோட்டலில் அதிபர் தர்மன், எக்வடோர் அதிபர் நொபோவாவிற்கு அரசுமுறை விருந்தளித்துச் சிறப்பித்தார். பெரும்பரப்பிலான பசிபிக் கடல் இரு நாடுகளைப் பிரித்தாலும், பங்காளித்துவத்தின் ஆழத்தை அந்தத் தொலைவு தீர்மானிக்காது என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.

இரண்டுமே கடல்சார் நாடுகள் என்பதால், கடல்சார் சட்டத்திற்கான ஐநா உடன்பாட்டை நிலைநிறுத்துவதிலும், தடையற்ற கப்பல் போக்குவரத்தைப் பேணுவதிலும் இரு நாடுகளுக்கும் பொதுவான ஆர்வம் உள்ளது என்று அவர் சொன்னார்.

பசிபிக் கூட்டமைப்பில் இணை உறுப்பினராக எக்வடோர் இணைவதற்கும் அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருடன் வணிகம், அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த விரும்புவதாக அதிபர் நொபோவா கூறினார். சிங்கப்பூரர்கள் கலாபகோசில் உள்ள சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி நிலையத்தில் தங்கிப் பணியாற்றலாம் என்றும் அவர் சொன்னார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

வேளாண்மை, உணவுத் துறைகளும் இரு நாடுகளின் ஒத்துழைப்பிற்கு ஏற்ற துறைகள் என்று அதிபர் தர்மன் குறிப்பிட்டார்.

எக்வடோரில் ஏற்கெனவே விநியோகச் சங்கிலித் தடமறிதல், துறைமுகச் சேவைகள் போன்ற துறைகளில் சிங்கப்பூர் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

“வளர்ச்சி, புத்தாக்கம், நீடித்த மேம்பாடு போன்றவற்றில் ஒரே சிந்தனை கொண்ட சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் நீண்டகாலப் பங்காளித்துவத்தை அமைத்துக்கொள்ள கடப்பாடு கொண்டுள்ளோம். செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்க உருமாற்றம், உத்திசார் தரவுப் பயன்பாடு, அறிவார்ந்த நகரங்கள் போன்றவற்றில் சிங்கப்பூரின் அனுபவத்தை உயர்வாக மதிப்பிடுகிறோம். அது எக்வடோரின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது,” என்று அதிபர் நொபோவா தெரிவித்தார்.