IND vs SL: ஜடேஜா முன்பு போல் பந்துவீச்சில் ஆக்கோரஷமாக இல்லை.. பேட்டிங்கிற்காக இருக்கலாம்
IND vs SL: ஜடேஜா முன்பு போல் பந்துவீச்சில் ஆக்கோரஷமாக இல்லை.. பேட்டிங்கிற்காக இருக்கலாம்- அஸ்வின்
மும்பை: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டியைத் தொடர்ந்து, மூத்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குறித்து அவரது முன்னாள் சக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ஜடேஜா முன்பைப் போல இப்போது ஆக்ரோஷமாகப் பந்துவீசும் பந்துவீச்சாளர் அல்ல என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தற்போதைய நிலையில் அவர் கீழ்வரிசையில் அனுபவம் வாய்ந்த பேட்டராகச் செயல்படும் விதம் மோசமானது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்போட்டியில் பந்துவீச்சில் அசத்திய இளம் வீரர் மானவ் சுதர் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முத்திரை பதித்தார்.
இது குறித்து பேசிய அஸ்வின், "ஜடேஜாவும் சுதரும் முற்றிலும் மாறுபட்ட பந்துவீச்சாளர்கள். கைகளில் இருந்து பந்தை சுழற்றும் விதம் தான் சுதரின் பலமாகும். ஆனால் ஜடேஜா விக்கெட்டுகளை நோக்கித் துல்லியமாக வீசி, தனது வழக்கமான பந்துகளின் மூலம் ஆட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார். ஜடேஜா இப்போது முன்பைப் போல விக்கெட்டுகளை வீழ்த்தும் ஆக்ரோஷமான சுழற்பந்துவீச்சாளர் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
"அவர் பந்துவீச்சிலும் தனது அனுபவத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு பேட்டராக மாறியுள்ளார். அவரது இந்த புதிய பொறுப்பு ஒன்றும் மோசமானது இல்லை" என்று தனது யூடியூப் சேனலில் அஸ்வின் பேசியுள்ளார். இந்த முதல் டெஸ்டில் ஜடேஜா மொத்தம் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் அடங்கும்.
"கடந்த டெஸ்ட் போட்டியிலும், தற்போதைய போட்டியிலும் தான் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர் என்பதை மானவ் சுதர் நிரூபித்துள்ளார். பேட்டர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை கணித்து அதற்கு ஏற்ப அவர் பந்துவீசினார். விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கும், பந்து எவ்வாறு கைகளில் இருந்து வெளிவருகிறது என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். பந்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள், அதற்கு ஏற்றவாறு ஃபீல்டிங்கை எவ்வாறு அமைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்."
"முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவின் சுழற்பந்துவீச்சு இருப்புக்கு அவர் மிகவும் முக்கியமானவர்" என்று அஸ்வின் புகழ்ந்தார். இந்த 24 வயது இடதுகை சுழற்பந்துவீச்சாளர் முதல் இன்னிங்ஸில் 4/76 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 6/55 என விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.