மிஸ்டர் கழுகு: எம்.ஜி.ஆர்., கருணாநிதி வழியில் பவர் சென்டரை உருவாக்கும் விஜய்!
மிஸ்டர் கழுகு: எம்.ஜி.ஆர்., கருணாநிதி வழியில் பவர் சென்டரை உருவாக்கும் விஜய்!
விழாவில் நடிகை த்ரிஷா முதல் வரிசையில் அமர்ந்திருந்ததுதான் கோட்டையில் பேசுபொருளாகி யிருக்கிறது. முதல்வரிடமிருந்து அவரை ‘கட்’ செய்துவிட, அதிகார மையங்களாக இருப்பவர்கள் ஏகத்துக்கும் முயன்றிருக்கிறார்கள்.
சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென அலுவலகத்துக்கு வந்தார் கழுகார். அவருக்கு, சுடச்சுட பக்கோடா கொடுத்தோம். பக்கோடாவைச் சாப்பிட்டபடியே செய்திக்குள் தாவினார் கழுகார்.
“கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நடந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு’ கட்டுக்கடங்காத கூட்டத்தால் பாதியிலேயே கைவிடப்பட்டிருக்கிறது. மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் மேடையேற முயன்றதால், ஒன்றரை மணி நேரம் பேசத் திட்டமிட்டிருந்த வி.சி.க தலைவர் திருமாவளவன், மாநாட்டு உரையை ஐந்து நிமிடங்களிலேயே முடித்துக் கொண்டார். ‘தமிழக அரசியல் களத்தில் வி.சி.க-வும் த.வெ.க-வும் இணைந்தே பயணிக்கும்’ என முதன்முறையாகக் கூட்டணியை உறுதிசெய்திருக்கிறார் திருமா.”
“இனியாவது அமைச்சர் வன்னி அரசு நிம்மதியாக இருப்பாரா..?’’
“ஆனால், பா.ம.க கடும் அப்செட்டாகிவிட்டதே... ‘த.வெ.க கூட்டணியில் பங்கேற்று செளமியா அன்புமணியை அமைச்சராக்க வேண்டும்’ என பா.ம.க-வினர் கண்ட கனவில், ‘நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம்’ என்று அறிவித்து வெந்நீரை ஊற்றிவிட்டார் திருமா.”
“சரிதான்... சுதந்திர தின விழாவில் கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்ட `தகைசால் தமிழர் விருது’க்கு ஏதோ பின்னணி இருக்கிறதாமே!”
“பட்டியல் சமூகத்தைச் சார்ந்த எட்டுப் பேருக்கு அமைச்சரவையில் இடமளித்திருக்கிறது த.வெ.க. கூட்டணியில் வி.சி.க-வையும் வைத்திருப்பதால், வன்னியர் சமூக வாக்குகளைக் கவர, அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு `தகைசால் தமிழர் விருது’ வழங்க முடிவெடுத்துள்ளனர். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விருதைப் பெற மறுத்து விட்டதால், செளமியா அன்புமணியின் தந்தையும், காங்கிரஸ் பிரமுகருமான கிருஷ்ணசாமிக்கு விருதைக் கொடுத்திருக்கிறார்கள். தந்தைக்கு `தகைசால் தமிழர் விருது’ கிடைத்ததில் செளமியா அன்புமணியின் பங்கும் இருக்கிறதாம்.”
“ஓஹோ... சுதந்திர தின விழாவில் வேறு ஏதேனும் சுவாரஸ்யம் இருக்கிறதா?”
“அது சரி... த்ரிஷா வருவதை எப்படி அனுமதித்தார்கள் அந்த அதிகார மையங்கள்?”
“த்ரிஷாதான் புது பவர் சென்டர் ஆகிவிட்டாரே... இனி யார் அனுமதி அவருக்கு வேண்டும்... புஸ்ஸி ஆனந்த்தில் தொடங்கி அமைச்சர்கள் பலரும் த்ரிஷாவுக்கு வணக்கம் வைத்தபடி நகர்ந்ததும், மஃப்டியில் பெண் போலீஸ் ஒருவர் த்ரிஷாவுக்குப் பாதுகாவலாக வலம் வந்ததும், முதல்வரின் `குட் புக்’கில் த்ரிஷா இடம்பிடித்திருப்பதை ஊருக்கே காட்டிவிட்டன. த்ரிஷாவின் என்ட்ரியால் அவருக்கு அணை போட்டுவைத்திருந்த அதிகார மையங்கள் ஆட்டம் கண்டிருக்கின்றன. எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஜெயலலிதா, ஜெயலலிதா ஆட்சியில் சசிகலா, கருணாநிதி ஆட்சியில் ராசாத்தியம்மாள், ஸ்டாலின் ஆட்சியில் சபரீசன் என அதிகார மையங்கள் நீண்டதைப்போல, த.வெ.க ஆட்சிக்கு த்ரிஷா என்கிறது அரசியல் வட்டாரம்..்.”
“முதல்வர் விஜய் விரும்பித்தான் இதெல்லாம் நடக்கின்றனவா?”
“அதையெல்லாம் அவர்தான் சொல்ல வேண்டும்’’ என்ற கழுகார், அடுத்த செய்திக்குள் நுழைந்தார்.
‘‘விஷ்ணு ரெட்டி, சுஜய் ரெட்டி, அனில் ரெட்டி என்று முதல்வரைச் சுற்றியிருப்பவர்கள், அரசு நிர்வாக விஷயங்களில் ஏகத்துக்கும் தலையிடுகிறார்களாம். அவர்கள் கொடுக்கும் தொல்லையால், கோட்டையின் உச்ச அதிகாரியே ஏக அழுத்தத்தில் இருக்கிறாராம். ‘அண்டை மாநில மொழி பேசுபவர்களுக்கே டிரான்ஸ்ஃபர்கள், பெரிய டெண்டர்கள் கிடைப்பதற்குப் பாதை அமைத்துக்கொடுக்கிறார்கள்’ என்று அவர்கள்மீது நிறைய புகார்கள் அடுக்கப்படுகின்றன...’’
‘‘ஐயய்யோ...’’
‘‘அது மட்டுமா... முதல்வருக்கு நெருக்கமாக இருப்பதாகச் சொல்லும் சிலர், 120 ஸ்வீட் பாக்ஸுகள் வரை, பலரிடமிருந்தும் கறந்திருக்கின்றனராம். அதை வெளிநாட்டில் பத்திரப்படுத்துவது குறித்து, தேனாம்பேட்டையிலுள்ள ஒரு பங்களாவில் சமீபத்தில் ஒரு ரகசியக் கூட்டம் நடத்தினராம். துபாய் ரியல் எஸ்டேட் தொழிலில் ஸ்வீட் பாக்ஸுகளை முதலீடு செய்ய அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம்....”
“முதல்வர்தான் சுதாரிப்புடன் இருக்க வேண்டும்... சரி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் நண்பரான ரத்தீஷுக்கு ‘லுக்அவுட்’ சர்க்குலர் வெளியிட்டிருக்கிறதே அரசாங்கம்?”
“டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கும் ரத்தீஷ், தற்சமயம் லண்டனில் இருக்கிறாராம். இந்தியாவுக்குள் எந்த விமான நிலையம் வழியாக நுழைய அவர் முயன்றாலும் சரி, அங்கேயே வைத்து அவரைக் கைதுசெய்யவே ‘லுக்அவுட்’ சர்குலர் வெளியிட்டிருக்கிறார்கள். அடுத்ததாக, அவரைத் தேடப்படும் நபராக அறிவித்து ‘புளூ கார்னர் நோட்டீஸ்’ வழங்கவும் ஆலோசித்திருக்கிறதாம் அரசாங்கம்.”
“சமீபத்தில், டாஸ்மாக் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள விசாகன் ஐ.ஏ.எஸ்-ஸிடம் விசாரித்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. விசாரணையில், தனக்கும் ரத்தீஷுக்கும் இருந்த தொடர்புகளைக் கக்கிவிட்டாராம் விசாகன். விரைவிலேயே ரத்தீஷைக் கைதுசெய்து, உதயநிதிக்கு நெருக்கடி கொடுக்க வேகமெடுக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. ரத்தீஷின் அண்ணன் சர்வேஸ் ராஜுக்கும் சிக்கல் வரும் என்பதால், ஐ.பி.எஸ் பொறுப்பிலிருந்து விடுபடும் யோசனையில் இருக்கிறாராம்... ”
“தி.மு.க மேலிட மாப்பிள்ளைக்கும், கொங்கு மாஜிக்கும் இடையே ஏதோ மோதலாமே?”
“கொங்கு மாஜியை வழக்குகள் சுற்றிவளைத்திருக்கும் நிலையில், ‘அவரை இனியும் தூக்கிச் சுமக்க முடியாது...’ என்ற முடிவுக்கு வந்துவிட்டதாம் கட்சி மேலிடம். மன வேதனையில் இருக்கும் கொங்கு மாஜிக்கும் மாப்பிள்ளைக்கும் இடையே கொடுக்கல், வாங்கலில் வார்த்தை மோதல் முற்றியிருக்கிறது. சூழலைப் புரிந்துகொண்ட இலைக் கட்சித் தலைமை, ‘இங்க வந்துடுங்க தம்பி’ என கொங்கு மாஜிக்குத் தூண்டில் போட்டிருக்கிறதாம். ‘கொங்கு மாஜி வந்தால், சர்ச்சையைக் கிளப்பும் கட்சியின் `பெல்’ பிரமுகரைத் தூக்கி வீசிவிடலாம்...’ என்று கணக்கு போடுகிறாராம் சேலத்துக்காரர்” என்ற கழுகாருக்கு ஜிலேபி ஒன்றைக் கொடுக்க, சுவைத்துவிட்டு செய்திகளைத் தொடர்ந்தார்.
“மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவருக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் பார்க்கிங் தொடர்பான பிரச்னை. அதில், சிந்தாமணி காவல் நிலைய போலீஸார், பரமசிவத்தை விசாரணைக்காக அழைத்துச் சென்று, தலையிலேயே எட்டி உதைத்ததால் தலைவலி ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஒரு மாத சிகிச்சையில் இருந்த பரமசிவம், சுதந்திர தினத்துக்கு மறுநாள் இறந்துபோனார். இந்தப் பிரச்னை வெளியே தெரியக் கூடாது என்பதற்காக, 20 லட்சம் தருவதாக பரமசிவம் குடும்பத்திடம் டீல் பேசிவருகிறார்களாம் போலீஸார். இந்தப் பிரச்னை நிச்சயம் சட்டமன்றத்தில் எதிரொலிக்கப்போகிறது.”
“சரிதான்... தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏதோ மாற்றங்களைச் செய்துவருகிறதே... என்ன விவகாரம்?”
“நூற்றாண்டைத் தொட்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, ஜென் ஸி இளைஞர்களை ஈர்க்கத் திட்டமிட்டிருப்பதோடு, அமைப்பில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தவிருக்கிறது. இதற்கான ஒப்புதலை, ‘அகில பாரத் பிரதிநிதி சபா’ என்ற மேலிட நிர்வாகத்திடம் ஒப்புதலும் பெற்றுவிட்டதாம். அதோடு, தெற்கு, வடக்கு என்றிருந்த தமிழக அமைப்பு முறையை நான்கு மண்டலங்களாகப் பிரித்திருக்கிறது. பூத்-வாரியாக நிர்வாகிகளை நியமிக்கவும் திட்டமிடுகிறது. ‘த.வெ.க ஆட்சியில் கிறிஸ்துவம் தமிழ்நாட்டில் வளர்ந்துவிடும் எனக் கருதுவதால், ஆர்.எஸ்.எஸ் விழித்துக்கொண்டு, இத்தகைய மாற்றங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறதாம்...்”
“தமிழ்நாட்டில் பிரமாண்ட ஸ்டேடியம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாவதால், முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் பிரமாண்ட ஸ்டேடியம் கட்டுவதற்குத் திட்டம் தயாராகிறதாம். சென்னைக்கு அருகிலேயே 70 ஏக்கர் பரப்பளவில் இடம் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் அதிகாரிகள்” என்று வாட்ச்சைப் பார்த்தபடி, “ஆம்னி பேருந்துக் கட்டணம், விமானப் பயணக் கட்டணங்களையே மிஞ்சிவிட்டது. ‘துறை அமைச்சரிடம் பேசியாச்சு. நீங்க தைரியமா ரேட்டை உயர்த்துங்க’ என்கிறார்களாம் ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகள்...” என்று கிளம்ப ஆயத்தமான கழுகார்,
“வி.சி.க மாநிலப் பொறுப்பு ஒன்றுக்கு `ஏ ப்ளஸ்’ ரௌடி ஒருவரை திருமா நியமித்திருப்பதாகக் குற்றசாட்டு எழுந்துள்ளது. அந்த மாநில நிர்வாகிமீது கொலை, கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றனவாம்...” என்று கூறிவிட்டு, சிறகுகளை விரித்து விண்ணில் பாய்ந்தார்!