IND vs SL: “துருவ் ஜுரல் ஒழுங்கா ஆடலை அவருக்கு பதில்”.. பிளேயிங் 11 பற்றி முகமது கைஃப் கருத்து
IND vs SL: “துருவ் ஜுரல் ஒழுங்கா ஆடலை அவருக்கு பதில்”.. பிளேயிங் 11 பற்றி முகமது கைஃப் கருத்து
டெல்லி: இலங்கைக்கு எதிராக ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனில், துருவ் ஜூரலுக்குப் பதிலாக சர்ஃபராஸ் கானை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காயமடைந்த சாய் சுதர்சனுக்கு மாற்றாக சர்ஃபராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என கூறப்பட்டது. இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய முகமது கைஃப், "இந்திய அணி ஏற்கனவே விளையாடி வரும் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், துருவ் ஜூரல் விளையாட வாய்ப்புள்ளது. ஆனால், எனது சிறந்த பிளேயிங் லெவனில் சர்ஃபராஸ் கானுக்கே இடம் தருவேன். காலே மைதானத்தின் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சூழலில், 5 அல்லது 6 வது வரிசையில் சர்ஃபராஸ் கான் விளையாடுவது அணிக்கு பலம் சேர்க்கும். சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் அவர் சிறந்தவர்" என்றார்.
சர்ஃபராஸ் கான் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 371 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் அடித்த 150 ரன்களும் அடங்கும். மேலும் பேசிய கைஃப், "சர்ஃபராஸ் கான் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்டுகளை ஆடுவதில் வல்லவர். போட்டியின் 4 அல்லது 5 வது நாளில் ஆடுகளம் கடினமாகும்போது இவரது ஆட்டம் இந்திய அணிக்கு பெரிதும் உதவும்" என்று கூறினார்.
மறுபுறம், துருவ் ஜூரலின் சமீபத்திய மோசமான ஃபார்ம் குறித்து கைஃப் கவலை தெரிவித்துள்ளார். சில நாட்கள் முன்பு நடந்த பயிற்சி ஆட்டத்தின் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஜூரல் வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 478 ரன்கள் எடுத்துள்ளார். இதனால், தற்போதைய நிலையில் ஜூரலை விட சர்ஃபராஸ் கான் சிறந்த தேர்வாக இருப்பார் என்று கைஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலே-யில் தொடங்க உள்ளது. இதில் இந்திய அணியின் 6 வது வரிசையில் யார் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்களிடையே எழுந்துள்ளது.