📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 13, 2026 04:04 AM

இன்ஸ்டாகிராமை அழித்ததால் 6 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய தாய்!

இன்ஸ்டாகிராமை அழித்ததால் 6 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய தாய்!

திருவனந்தபுரம்,

இன்ஸ்டாகிராமை அழித்ததால் 6 வயது சிறுமியை தாய் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொடூர தாக்குதல்

கேரள மாநில திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் ஷோபா. இவர், கடந்த 9-ந்தேதி தனது மகள் கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் மருத்துவர்கள், மேல்சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்பட்ட காயங்கள் கட்டிலில் இருந்து விழுந்தது போல் இல்லை என்று சந்தேகித்து நெய்யாற்றின்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் சிறுமியின் தாய் ஷோபாவிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குழந்தையை கொடூரமாக தாக்கியது தெரியவந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த ஷோபா, தன் பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் விஷ்ணு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். விஷ்ணு வேலைக்கு சென்ற பின்னர் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ் புக்கில் அடிமையாகியுள்ளார். இதனால் தனது 6 வயது பெண் குழந்தையைக்கூட கவனிக்க நேரமில்லை. இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி மதியம் தாயின் செல்போனை எடுத்து விளையாடிய சிறுமி விளையாட்டு தனமாக போனில் இருந்து வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ் புக் போன்ற செயலிகளை அழித்துவிட்டாள்.

இதனால், ஆத்திரமடைந்த ஷோபா தனது குழந்தையை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கி தரையில் தூக்கி வீசினார். தாக்குதலில், சிறுமியின் தலை, முகம் உட்பட உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், தனது மகள் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தது போல் நாடகமாடியது போலீசாருக்கு தெரியவந்தது.

குழந்தையை கொடூரமாக தாக்கிய ஷோபா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.