📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 13, 2026 02:00 PM

இந்தியா

இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் போட்டி பைனலில் தான் நடக்கும்.. 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ட்விஸ்ட்

மும்பை: ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற உள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Asian Games), இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தொடக்க சுற்றுகளில் நடக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி, நாக்-அவுட் சுற்றுகளின் இறுதிப் பகுதியில்தான் அரங்கேற வாய்ப்பு உள்ளது. எப்போதும் ஐசிசி தொடர்களில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் தொடக்க சுற்றிலேயே நடைபெற்று வரும் நிலையில் ஆசிய விளையாட்டுத் தொடரில் அதற்கு நேர்மாறாக நடைபெற உள்ளது.

2026 ஆசிய விளையாட்டில் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் முன்னணி அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகியவை நேரடியாகக் கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இதில் இந்தியா 2-வது கால் இறுதியிலும், பாகிஸ்தான் 1-வது கால் இறுதியிலும் விளையாட உள்ளன. இந்த இரு போட்டிகளும் செப்டம்பர் 28 அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தொடரின் அரையிறுதி அட்டவணைப்படி, 2-வது கால் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி, 3-வது கால் இறுதியின் வெற்றியாளருடன் மோதும். அதேபோல், முதல் கால் இறுதியின் வெற்றியாளர், 4-வது கால் இறுதியின் வெற்றியாளருடன் மோத வேண்டும். இதன் காரணமாக அரையிறுதி வரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத வாய்ப்பில்லை. இரு அணிகளும் தங்களது அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் மோத முடியும். ஒருவேளை இரு அரையிறுதியிலும் இரு அணிகளும் தோல்வி அடைந்தால், அவை வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் நேருக்கு நேர் மோதும்.

பெண்கள் கிரிக்கெட் போட்டியிலும் இதே போன்ற வடிவமே பின்பற்றப்படுகிறது. ஆண்கள் பிரிவில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில், பெண்கள் பிரிவில் 8 அணிகள் மட்டுமே விளையாடுகின்றன. இதில் இந்திய பெண்கள் அணி முதலிடத்திலும், பாகிஸ்தான் அணி 4-வது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள் பிரிவில் இந்தியா தனது கால் இறுதிப் போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி தாய்லாந்துடன் மோத உள்ளது. இதிலும் இரு அணிகளும் இறுதிப்போட்டி அல்லது வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மட்டுமே மோத முடியும்.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறுகின்றன. கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 17 அன்று தொடங்கும். பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டி செப்டம்பர் 22 அன்றும், ஆண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டி அக்டோபர் 3 அன்றும் நடைபெற உள்ளது.