📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 13, 2026 08:05 PM

பியார் பிரேமா கல்யாணம் எப்படி இருக்கும்?.. நம்பிக்கையோடு பேசும் யுவன் ஷங்கர் ராஜா

பியார் பிரேமா கல்யாணம் எப்படி இருக்கும்?.. நம்பிக்கையோடு பேசும் யுவன் ஷங்கர் ராஜா

சென்னை: யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். எக்கச்சக்க ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர்; இப்போது பியார் பிரேமா கல்யாணம் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். வரும் 21ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் படம் குறித்து யுவன் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதில் சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் 1997ஆம் ஆண்டு வெளியானது. அரவிந்தன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும்போது அவருக்கு வயது 15லிருந்து 17க்குள்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தில் அவரது இசை பெரிதாக கவனிக்கப்படவில்லை.

கவனம் ஈர்த்த யுவன் ஷங்கர் ராஜா: முதல் படத்தில் கவனிக்கப்படாமல் போன யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இயக்குநர் வசந்த்தின் படங்களில் எப்போதும் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதற்கு தகுந்ததுபோல் இசையமைத்தார் யுவன் ஷங்கர் ராஜா. இன்றுவரை பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் பாடல்கள் அனைத்தும் எவர் க்ரீனாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

உச்சம் தொட்ட யுவன்: பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துக்கு பிறகு யுவனின் மெட்டுக்கள் எல்லாமும் ஹிட்டாகின. இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர், தேவா, கார்த்திக் ராஜா என்று பலரும் தங்களது பெஸ்ட்டை கொடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் உள்ளே வந்து தனது எளிமையான இசை மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார் யுவன். குறிப்பாக செல்வராகவனுடன் அவர் இணைந்து 2000களின் தொடக்கத்தில் யுவன் கொடுத்தது எல்லாமே ஹிட். அதேபோல் ராம், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, அமீர் என பல இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து யுவன் ஷங்கர் ராஜா உச்சம் தொட்டார்.

இப்போதும் பிஸி: இடையில் அவரது திருமண வாழ்க்கையில் நடந்த சில பிரச்னைகள், தாயின் மரணம் எல்லாம் சேர்ந்து அவரது கரியரை அசைத்து பார்த்தது. ஒருகட்டத்தில் சுதாரித்துக்கொண்ட அவர்; மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அந்தவகையில் அவர் இசையமைத்த கோட் உள்ளிட்ட படங்கள் வந்தன. ஆனால் அதில் யுவனின் டச் எதுவுமே இல்லை என ரசிகர்கள் நொந்துகொண்டார்கள். சூழல் இப்படி இருக்க இப்போது அவர் பியார் பிரேமா கல்யாணம் என்ற படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

யுவன் சொன்னது: படம் குறித்து பேசிய யுவன், "நானும், இளனும் பணியாற்றும்போது 3லிருந்து நான்கு பாடல்களை உருவாக்கலாம் என்றுதான் திட்டமிடுவோம். ஆனால் படம் முடிவடையும் நேரத்தில் அது 13லிருந்து 14 பாடல்களாக மாறிவிடும். பியார் பிரேமா காதல் படத்திலும் இதேதான் நடந்தது. இப்படத்திலும் இளனின் டச் இருக்கிறது. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படமாக மட்டுமின்றி அனைவரையும் கவரும் வகையில் ரொமான்ட்டிக் காமெடி படமாக இது இருக்கும்" என்றார்.