📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 22, 2026 08:00 PM

இந்தியாவில் இருந்து தமிழ் அகதிகளை தாயகம் அழைத்து வர இலங்கை முயற்சி

இந்தியாவில் இருந்து தமிழ் அகதிகளை தாயகம் அழைத்து வர இலங்கை முயற்சி

கொழும்பு: பல பத்தாண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள், தாங்களாக முன்வந்து தாயகம் திரும்புவதை விரைவுபடுத்தும் வகையில் குடியேற்ற நடைமுறைகளை எளிதாக்க இலங்கை அரசு எடுத்துள்ள முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான ஐ.நா.வின் வாழ்விட ஒருங்கிணைப்பாளரும் ஐ.நா. பொதுச் செயலாளரின் பிரதிநிதியுமான மார்க் ஆண்ட்ரே ஃபிரான்ச் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பல ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்த நிலையில், பாதுகாப்பான மற்றும் கண்ணியமான முறையில் தாயகம் திரும்புவதை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக, இலங்கை அகதிகள் தாங்களாகவே முன்வந்து திரும்புவதற்கான நடைமுறைகள் குறித்த அமைச்சரவையின் முடிவை நான் வரவேற்கிறேன்.

இந்த அகதிகள் தாயகம் திரும்புவதற்கும் மறுவாழ்வு பெறுவதற்கும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் (UNHCR) தொடர்ந்து உதவும்." என்று கூறியுள்ளார்.

இலங்கையில் 1983-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியபோது அந்நாட்டு ராணுவம் மற்றும் சிங்களவர்களால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இதனால் இலங்கையில் இருந்து அகதிகளாக உலகம் முழுவதும் தமிழ் மக்கள் புலம்பெயரத் தொடங்கினர்.

கடந்த 1983-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 பேர் அகதிகளாக வந்துள்ளனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் (UNHCR) தமிழகம் மற்றும் இந்திய அரசின் மூலமாக சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் சென்றனர்.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள 108 முகாம்களில் 58 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ளனர். முகாமுக்கு வெளியே உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து இலங்கை தமிழர்கள் 34 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். மேலும் ஒடிசாவின் மால்கன்கிரியில் உள்ள முகாமில் 60 பேர் தங்கி உள்ளனர்.

தற்போது இவர்கள் தாயகம் திரும்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து இம்மாத தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் ஊடகத் துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்தியாவில் முகாமில் தங்கி உள்ள இலங்கை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் மூலமாகவும், சுயமாகவும் தாயகத்துக்கு (இலங்கைக்கு) திரும்ப விரும்புகிறார்கள். அவர்கள் இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு தேவையான குடிவரவு அனுமதிக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது.

இலங்கைக்கு வர விரும்புவோர் 2006 ஜூன் ஒன்றாம் தேதிக்கு முன்னர் இலங்கையை விட்டுச் சென்றிருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் தம்மை இலங்கையர் எனும் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

அவர்கள் மீது கொலை, அரசுக்கு எதிராக துரோகம், குற்றங்களை மேற்கொள்ளாத ஆள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவர்களுக்கு தற்காலிக வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்கி இலங்கைக்கு வருகை தருவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.