ஜாகீர் கான் கிடையாது.. அகர்கரின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் வர வாய்ப்பு
ஜாகீர் கான் கிடையாது.. அகர்கரின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் வர வாய்ப்பு
மும்பை: இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கருக்குப் பதிலாக, முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் புதிய தலைமைத் தேர்வாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு சமீபத்தில் தான் அறிவித்தது. இந்த நிலையில், பிசிசிஐ தற்போதைய தலைமைத் தேர்வாளர் அகர்கருக்குப் பதிலாக பார்த்திவ் படேலை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து அஜித் அகர்கர் இந்த பொறுப்பில் உள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் பார்த்திவ் படேலை, அடுத்த தலைமைத் தேர்வாளராக நியமிக்க பிசிசிஐ தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் பார்த்திவ் படேலின் நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் ஒரு முக்கியமான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் கலந்து கொள்ளாதது பல கேள்விகளை எழுப்பியது. தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் சுப்மன் கில், டி20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் வி.வி.எஸ். லட்சுமண் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் அறிமுகமான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றவர் பார்த்திவ் படேல். தனது 17வது வயதில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் அறிமுகமானார். 2002 முதல் 2012 வரை 25 டெஸ்ட், 38 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் வருகைக்குப் பிறகு, பார்த்திவ் படேலுக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் இரண்டாவது விக்கெட் கீப்பராகவே நீடித்தார். மேலும் விருத்திமான் சஹா, தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களிடமிருந்தும் அவர் கடுமையான போட்டியை எதிர்கொண்டார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெக்கான் சார்ஜர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட பல அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார்.
மேலும், பார்த்திவ் படேல் தவிர, இந்தியாவின் முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவின் பெயரும் இந்த தலைமைத் தேர்வாளர் பதவிக்கான பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.