Jailer 2: CM விஜய்யை சீண்டும் வசனங்கள்?.. ஜெயிலர் 2 ரிலீஸில் சிக்கல்.. நெல்சனின் ரீ ஷூட் பிளான்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான 'ஜெயிலர்' திரைப்படம், உலகளவில் ₹600 கோடிக்கும் மேல் வசூலித்து பிரம்மாண்ட பிளாக்பாஸ்டர் ஹிட்டடித்தது. அனிருத்தின் இசையில் 'டைகர் கா ஹுகும்' பாடல் மாஸ் காட்டிய நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இதன் இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' அக்டோபர் 15-ஆம் தேதி ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படம் குறிக்கப்பட்ட தேதியில் வெளியாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது!
ஜெயிலர் 2: முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழகம், கேரளா, கொச்சியில் என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சர்ச்சையில் சிக்கிய ஜெயிலர் 2: இந்நிலையில், ஜெயிலர் 2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் தவெக தலைவரான விஜய் தீவிர அரசியல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த காலத்தில், 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது விஜய்யின் அரசியல் நகர்வுகளை விமர்சிக்கும் வகையிலும், அவரை மறைமுகமாக சீண்டும் வகையிலும் சில காரசாரமான வசனங்களும் காட்சிகளும் படத்தில் வைக்கப்பட்டிருந்ததாக' கூறப்படுகிறது. ஆனால், தற்போது விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த சர்ச்சைக்குரிய வசனங்கள் திரையில் வந்தால் அது மாபெரும் அரசியல் புயலையும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுத்தும் படக்குழு கணித்துள்ளது.
ரீ ஷூட்டில் நெல்சன்: முதலமைச்சர் விஜய்யை பற்றிய அந்த சர்ச்சைக்குரிய வசனங்கள் மிகபெரிய அளவில் எதிர்ப்பை கூட்டும் என்பதால், அவற்றை முழுமையாக படத்திலிருந்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக புதிய காட்சிகளை படமாக்கி இயக்குநர் நெல்சன் திலீப்குமார் திட்டமிட்டுள்ளார். இதற்காக திட்டமிடப்படாத கூடுதல் படப்பிடிப்பு நாட்கள் தேவைப்படுவதாலும், எடிட்டிங் மற்றும் சென்சார் பணிகளுக்குக் கால அவகாசம் பிடிக்கும் என்பதாலும், அறிவிக்கப்பட்டபடி அக்டோபர் 15ந் தேதி 'ஜெயிலர் 2' வெளியாவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.