காலே டெஸ்ட் விறுவிறுப்பு; வெற்றிப்பாதையில் இந்தியா: இலங்கை 4 விக்கெட் இழந்து தடுமாற்றம்
காலே டெஸ்ட் விறுவிறுப்பு; வெற்றிப்பாதையில் இந்தியா: இலங்கை 4 விக்கெட் இழந்து தடுமாற்றம்
காலே: இலங்கையுடனான முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்தியா- இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 462 ரன்கள், இலங்கை அணி 284 ரன்கள் எடுத்தன. 178 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை நேற்று இந்திய அணி துவக்கியது. ஓபனர் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆக மற்றொரு ஓபனர் கேஎல்.ராகுல், 35 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து முதல் இன்னிங்சில் சதமடித்த தேவ்தத் படிக்கல் 44 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து வந்த கேப்டன் கில் 8 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக அடி அரை சதமடித்து 66 ரன்னில் (69 பந்து, 8 போர், 2 சிக்ஸ்) அவுட் ஆனார். அடுத்து வந்த துருவ் ஜுரல் 7, ஜடேஜா 9, மானவ் சுதர் 9, குல்தீப் யாதவ் 5, பிரசித் கிருஷ்ணா 2 என ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 48.5 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னான்டோ 4 விக்கெட், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட், லகிரு குமரா 2 விக்கெட், நுவாந்தா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து 371 ரன்கள் வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி ஓபனர் நிசான் மடுஷ்கா 6 ரன், அடுத்ததாக காயமடைந்த சண்டிமாலுக்கு பதிலாக வந்த மாற்று வீரர் சூர்யா பண்டாரா டக் அவுட், காமின்டு மென்டிஸ் 2 ரன், மற்றொரு ஓபனர் லகிரு உதாரா 16 ரன்னிலும் அவுட் ஆகினர்.
47 ரன்னிற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தத்தளித்தது. அடுத்து விக்கெட் விழ விடாமல் நிதானமாக ஆடிய கேப்டன் தனஞ்செயா டிசில்வா 31 ரன், சோனல் 25 ரன்னுடன் களத்தில் நிற்க 4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்தது. இன்று 5ம் நாள் ஆட்டம் நடக்கும் நிலையில் இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 288 ரன்கள் தேவை. ஆனால் கைவசம் 6 விக்கெட் மட்டுமே இருப்பதால் முதல் போட்டியில் இந்திய அணியின் வெற்றி ஓரளவுக்கு பிரகாசமாகி உள்ளது.