📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 19, 2026 03:34 AM

"மக்களின் எதிர்பார்ப்புகளை த.வெ.க அரசு நிறைவேற்றவில்லை!"

"மக்களின் எதிர்பார்ப்புகளை த.வெ.க அரசு நிறைவேற்றவில்லை!"

"மக்களின் எதிர்பார்ப்புகளை த.வெ.க அரசு நிறைவேற்றவில்லை!" - பெ.சண்முகம் EXCLUSIVE

"நல்லது நடந்தால் அதற்கு முதல்வர் காரணம் என்றும், தவறு நடந்தால் அதிகாரிகள்தான் காரணம் என்றும் கூறுவது பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாகிவிடும்!"

"முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு 100 நாட்களைக் கடந்திருக்கிறது. சட்டமன்றத்தில் முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ததுடன், முதலீட்டாளர் மாநாட்டையும் த.வெ.க அரசு நடத்தியிருக்கிறது. இந்த 100 நாள் ஆட்சி குறித்த உங்கள் பார்வை என்ன?"

"நூறு நாட்கள் என்பது ஓர் அரசின் செயல்பாட்டை முழுமையாக மதிப்பிடுவதற்குப் போதுமான காலம் அல்ல. அதே நேரத்தில், அரசு என்ன செய்திருக்கிறது, என்ன செய்யத் தவறியிருக்கிறது என்பதைப் பார்க்கலாம். தேர்தல் வாக்குறுதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், முதல் பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை.

உதாரணமாக, பெண்களுக்கான உரிமைத்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இது குறித்த அறிவிப்பைத் தாய்மார்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், பட்ஜெட்டில் அதுகுறித்து எந்த அறிவிப்பும் இல்லை. எப்போது உயர்த்தப்படும் என்பதும் தெளிவாக இல்லை.

அதேபோல், வேலைவாய்ப்பின்மை தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்னையாக இருந்துவருகிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால், காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து பெரிய அறிவிப்பு இல்லை. வேலையில்லா கால நிவாரணமாக ரூ.4,000 வழங்குவோம் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை."

"தமிழக அரசின் வருவாயைப் பெருக்குவதற்கான ஆலோசனைகளை வழங்க மத்திய திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?"

"மாண்டேக் சிங் அலுவாலியா தாராளமயக் கொள்கை, தனியார்மயத்தை ஆதரிப்பவர். அவருடைய குழுவுக்குத் தமிழ்நாடு அரசின் வருவாயைப் பெருக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் என்ன பரிந்துரைகளை வழங்குகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் நாம் மதிப்பிட முடியும். ஆனால், வருவாயைப் பெருக்குகிறோம் என்ற பெயரில் ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும் நடவடிக்கைகள் வந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கும்."

"சட்டமன்றத்தின் செயல்பாடு குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?"

"மக்கள் பிரச்னைகளை விவாதித்து, அதற்கான சட்டங்களையும் திட்டங்களையும் உருவாக்க வேண்டிய இடம், சட்டமன்றம். ஆனால், சட்டமன்றத்தின் நேரம் தற்போது வீணடிக்கப்படுகிறது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. த.வெ.க-வின் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் சட்டமன்றத்துக்குப் புதியவர்கள் என்பதால், அவர்களுக்குச் சட்டமன்ற விதிமுறைகளை அறிந்துகொள்வதற்குப் பயிற்சி வழங்கப்பட வேண்டும். ஆனால், பழம் தின்று கொட்டை போட்ட தி.மு.க., அ.தி.மு.க-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்களா என்பதுதான் கேள்வி.

சட்டமன்றம் ‘லாவணி கச்சேரி’ நடத்தும் இடமாக மாறக்கூடாது. பட்ஜெட் விவாதத்தில்கூட அதனுடன் தொடர்பில்லாத பல விஷயங்கள் பேசப்படுகின்றன. எங்களுக்கு வழங்கப்படும் குறைந்த நேரத்தில்கூட இடதுசாரி உறுப்பினர்கள் மக்கள் பிரச்னைகளை எழுப்பி, அரசின் கவனத்தை ஈர்க்க முயல்கிறார்கள். அதே பொறுப்புணர்வு ஆளும் கட்சிக்கும் இருக்க வேண்டும்.

ஒருவர் தனது சட்டைப் பையில் யாருடைய புகைப்படத்தை வைத்திருக்கிறார் என்பது குறித்து அரை மணி நேரம் விவாதிக்கிறார்கள். இது, மக்கள் பிரச்னையா? இதுபோன்ற விஷயங்களுக்கு நேரத்தை வீணடிக்காமல், மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. தங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். சட்டமன்றம் தனிப்பட்ட அரசியல் விமர்சனங்களுக்கான மேடையாக இல்லாமல், மக்களின் பிரச்னைகளைப் பேசுவதற்கான ஆக்கப்பூர்வமான மன்றமாகச் செயல்பட வேண்டும்."

"சபாநாயகரைப் பொறுத்தளவில், சட்டமன்றத்தை அவர் சிறப்பாக நடத்துகிறார் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. அமைச்சர்களோ, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களோ தவறாகப் பேசினால்கூட, அதை அவர் கண்டிக்கிறார்... அவர்கள் பேசிய கருத்துக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்குகிறாரே?"

"அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது விதிமுறைகளுக்கு மாறாக இருந்தால், அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவது நடுநிலையான அணுகுமுறை. அதே நேரம், விவாதம் ஆக்கப்பூர்வமாகவும், தொடர்புடையதாகவும் இருப்பதையும் அவர் உறுதி செய்ய வேண்டும்.

அனாவசியமான பிரச்னைகள் எழுப்பப்பட்டால், அதைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கிறது. பட்ஜெட் மீதான விவாதத்தில் தேவையற்ற பேச்சுகள் இடம்பெற்றால், அதைத் தடுத்து, அவையின் நேரம் வீணாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து கட்சித் தலைவர்களுமே, தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள், உரிய மாண்புடன் நடந்து கொள்வதையும், அதை மக்களுக்காகப் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்."

"முதல்வர் விஜய் தன்னுடைய துறைகள் தொடர்பான பல கேள்விகளுக்குப் பதில் சொல்வதில்லை. அவருக்குப் பதிலாக அமைச்சர்கள் பதிலளிக்கிறார்களே?"

"முதலமைச்சரே சம்பந்தப்பட்ட துறைக்கான கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிப்பது சிறப்பாக இருக்கும். குறிப்பாக, உள்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அது தொடர்பான கேள்விக்கு வேறு அமைச்சர் பதிலளிப்பதைவிட, முதலமைச்சரே பதிலளித்தால் அது பொருத்தமாக இருக்கும்."

"முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது இல்லையே?"

"முதலமைச்சர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது என்பது ஜனநாயகத்தில் முக்கியமானது. கலைஞர் கருணாநிதி பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து சந்தித்து வந்தார். அரசின் செயல்பாடுகளை விளக்குவதற்கும், மக்களுக்குத் தகவல்கள் சென்று சேர்வதற்கும் அந்தச் சந்திப்புகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினார்.

ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகியோர் தேவைக்கேற்ப பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளனர். ஆனால், தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்திப்பது என்பது அவர்களிடம் வழக்கமாக இருந்தது என்று சொல்ல முடியாது. அரசின் சார்பில் அமைச்சர்கள் பதிலளிப்பதைவிட, முக்கியமான விவகாரங்களில் முதலமைச்சரே நேரடியாக விளக்கம் அளிப்பது சிறப்பாக இருக்கும்."

"புதிய ஆட்சிக்கு ஆறு மாத கால அவகாசம் தேவை என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் சொன்னார். நீங்களும் அதைக் கூறினார்கள். ஆனால், ஆட்சி அமைந்த சில வாரங்களிலேயே த.வெ.க அரசைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டீர்களே?"

"ஆறு மாத கால அவகாசம் என்பது அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், நிர்வாகத்தைப் புரிந்துகொள்வதற்குமான காலம். ஆனால், ஆட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்படும் தவறுகளை ஆறு மாதங்கள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. தவறுகள் நடந்தால் உடனடியாக விமர்சிக்கலாம், கண்டிக்கலாம்."

"நீட் எதிர்ப்பு போராட்டத்தின்போது மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறையைக் கண்டித்தீர்கள். அப்போது, அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று எச்சரித்தீர்களே?"

"நாங்கள் இரண்டு விஷயங்களைத் தெளிவாகக் கூறியிருக்கிறோம். ஒன்று, அ.தி.மு.க.வை அமைச்சரவையில் சேர்த்தால் எங்களுடைய ஆதரவை மறுபரிசீலனை செய்வோம். இரண்டாவது, போராட்டங்கள் தொடர்பாக அரசின் அணுகுமுறை மாறாவிட்டால், எங்களுடைய அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்படும். இதைத்தான் நான் கூறினேன். ‘அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவோம்’ என்று நான் கூறவில்லை. ஒரு குறிப்பிட்ட பத்திரிகை எனது கருத்தைத் திருத்தி வெளியிட்டுவிட்டது. ஆனால், நான் அப்படிச் சொல்லவில்லை.

போராடுவதற்கான உரிமையை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. ஆனால், போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, போராட்டம் நடைபெறும் இடங்களில் காவல்துறையைக் குவித்துத் தடுப்பது போன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்துக்கு எதிரானவை. உதாரணமாக, நீட் தேர்வுக்கு எதிராகப் பிரசார இயக்கம் நடத்தத் திராவிடர் இயக்கம் அனுமதி கோரியது. கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.

அதன் பிறகு, அலுவலக வளாகத்துக்குள் காவல்துறை நுழைந்து போராட்டத்தைத் தடுத்தது. இது, தேவையற்ற அத்துமீறல். ஒரு போராட்டத்தைத் தடுக்க வேண்டுமென்றால், அதற்கான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றலாம். ஆனால், அலுவலக வளாகத்துக்குள் காவல்துறை நுழைவது ஏற்றுக்கொள்ள முடியாதது. நடைப்பயணம் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், நடைப்பயணம் செல்வதே குற்றமா?

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரத்தைத் தடுப்பது ஏன்? போராட்ட உரிமையை மறுப்பது ஜனநாயக விரோதமானது. கருத்துரிமைக்கும் எதிரானது. இதுபோன்ற முடிவுகளை அதிகாரிகள் தன்னிச்சையாக எடுக்காமல், ஜனநாயக உரிமைகளை மதிக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும்."

"த.வெ.க ஆட்சியில் அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், போராட்டங்களைத் தடுக்கும் முடிவுகள் அதிகாரிகள் மட்டத்தில்தான் எடுக்கப்படுகின்றன என்றும் விமர்சனம் இருக்கிறதே?"

"மாநிலம் முழுவதும் நடைபெறும் பிரசார இயக்கத்தைத் தடுப்பதும், பெரியார் திடலில் காவல்துறையைக் குவிப்பதும் அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் எடுக்கக்கூடிய முடிவுகள் என்று கூறுவது நம்பும்படியாக இல்லை. அதிகாரிகள் எந்த முடிவை எடுத்தாலும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது முதலமைச்சரும் அமைச்சர்களும்தான். அதிகாரிகளைக் கட்டுப்படுத்துவதும், அவர்களை ஒழுங்குபடுத்துவதும் அரசின் பொறுப்பு.

சில அதிகாரிகள் முக்கிய முடிவுகளில் அதிக செல்வாக்குடன் இருக்கலாம். ஆனால், நல்லது நடந்தால் அதற்கெல்லாம் முதலமைச்சர் காரணம் என்றும், தவறு நடந்தால் அதிகாரிகள்தான் காரணம் என்றும் கூறுவது பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாகிவிடும். அரசின் ஒவ்வொரு முடிவுக்கும் அரசியல் தலைமையே இறுதியில் பொறுப்பேற்க வேண்டும்."

"த.வெ.க அரசில் தலித் சமூகத்தைச் சேர்ந்த எட்டு அமைச்சர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால், தலித் சமூகத்துக்கு அந்த அமைச்சர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் விமர்சிக்கிறாரே?"

"பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக வந்தால், அவர் அந்தச் சமூகத்துக்கே தனியாகப் பணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்புடன் செயல்படுவது. அவர்கள் கட்சியின் கொள்கை மற்றும் தலைமையின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறார்கள்.

அதேநேரத்தில், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு எட்டு தலித் அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். அதே நேரம், அவர்கள் அமைச்சர்களாக இருப்பதால் மட்டும் அந்த சமூகத்தில் பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்ப்பது தவறு."

"விமர்சனங்களை எதிர்கொள்வது எங்களுக்குப் புதிதல்ல. தி.மு.க அல்லது அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் உறவில் இருக்கும்போது ஒரு விதமாகவும், உறவு முறிந்த பிறகு வேறு விதமாகவும் விமர்சிப்பது அவர்களுடைய அரசியல் நடைமுறை. நாங்கள் பிரச்னைகளின் அடிப்படையில்தான் அரசியல் முடிவுகளை எடுக்கிறோம். தனிநபர்களைத் தாக்குவது எங்களுடைய அரசியல் அணுகுமுறை அல்ல. அத்தகை விமர்சனங்களைத் தனிப்பட்ட தாக்குதலாக நாங்கள் எடுத்துக்கொள்வதில்லை."

"எங்களுடைய கட்சியின் மாநில செயற்குழு சார்பில் நாங்கள் அதற்கான பதிலை ஏற்கெனவே அளித்திருக்கிறோம். ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ ஏட்டில் வெளியாகும் விமர்சனக் கட்டுரைகளுக்கு அந்தக் கட்சிதான் பதிலளிக்க வேண்டும். அது சரியான அரசியல் அணுகுமுறையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்."