காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நிச்சயம் அரசு வழங்கும் காரை பெற்றுக்கொள்வார்கள்
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நிச்சயம் அரசு வழங்கும் காரை பெற்றுக்கொள்வார்கள் - அமைச்சர் ராஜேஷ்குமார்
தமிழக அரசு கார் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என அமைச்சர் ராஜேஷ்குமார் கூறியுள்ளார்.
Published : August 22, 2026 at 8:17 PM IST
சென்னை: தமிழக அரசு வழங்கும் கார்களை காங்கிரஸ் உறுப்பினர்கள் நிச்சயம் பெற்றுக்கொள்வார்கள் என அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள விக்டோரியா ஹாலில் சுற்றுலாத் துறை சார்பில், மெட்ராஸ் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சென்னை பற்றி பாடகர்கள் பாடிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், "சென்னையின் வரலாற்று சிறப்புமிக்க அழகினையும், அதன் கட்டிட சிறப்புகளையும், இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு கொண்டு செல்லும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் தொடர்ந்து இதுபோன்ற விழாக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அனைவருக்கும் சென்னை தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
சுற்றுலாத்துறை சார்பில் சென்னையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாகவும், சென்னையில் வணிக ரீதியாக அதிகளவு மக்கள் பயனடைந்துள்ளார்கள். பக்கிங்காம் கால்வாயில் படகு சவாரி மேற்கொள்ள அந்த கால்வாய் தூர்வாரப்பட உள்ளது. வெளிநாட்டு அளவிற்கு சென்னை நகரை மாற்று திட்டமிட்டு உள்ளது.
கடற்கரையில் 500 மீட்டர் தொலைவில், எந்த ஒரு திட்டம் செயல்படுத்துவதாக இருந்தாலும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டும், அந்தத் துறை என்ன மதிப்பீடு செய்கிறதோ அதன் அடிப்படையில் தான் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம் ஏவிஎம் கால்வாய் 22 கிலோமீட்டர் உள்ளது. அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு, அந்த கால்வாய் சீர் செய்யப்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.22 கோடி ஒதுக்கப்பட்டு, ஒன்பது கிலோமீட்டர் தூரம் அந்த கால்வாயை முழுமையாக சீர் செய்து பூங்கா அமைக்க உள்ளோம்" என கூறினார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படுவது தொடர்பாக கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், "நான் வைத்திருக்கும் கார் இன்னும் கடனில் தான் உள்ளது, தமிழக அரசு கொடுக்கும் காரை நிச்சயமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் பெற்றுக் கொள்வார்கள். கார் இருப்பதால் தொகுதி முழுவதும் பயணிக்க முடியும், கார் கொடுப்பதில் தவறு இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.