"கேப்டன் விஜயகாந்த் இறுதிவரை தமிழ் மொழி படங்களில் மட்டுமே நடித்தார்"
"கேப்டன் விஜயகாந்த் இறுதிவரை தமிழ் மொழி படங்களில் மட்டுமே நடித்தார்" - பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி
மக்கள் விரும்பும் திட்டங்களை தேமுதிக ஏற்றுக்கொள்ளும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
Published : August 11, 2026 at 9:39 PM IST
சென்னை: "கேப்டன் விஜயகாந்த் இறுதிவரை தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்கவில்லை" என சட்டப்பேரவையில் தேமுதிக பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம் தெரிவித்தார்.
இன்றைய சட்டப்பேரவையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தமிழ் மொழியை தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரும் தாயாகத்தான் நினைக்கிறார்கள். தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த படங்களிலும் நடிக்காமல், தமிழ் மொழியை மட்டுமே பேசி நடித்த விஜயகாந்த், தமிழ் பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்டு வாழ்ந்தது கிடையாது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் நம் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கை தமிழர்களுக்கும் உரித்தானது. எனவே, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றிய, தீர்மானத்தை தேமுதிக வரவேற்கிறது. குறிப்பாக, அரசு கொண்டு வந்த மூன்று தீர்மானத்தையும் தேமுதிக வரவேற்கிறது” என்றார்.
மேலும், “மறைந்த அனிதாவிற்கு களத்தில் இறுதிவரை இருந்து அஞ்சலி செலுத்தியவர் விஜயகாந்த். மக்கள் விரும்பும் திட்டங்களை தேமுதிக ஏற்றுக்கொள்ளும். அந்த வகையில், நீட் விலக்குக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தையும் வரவேற்கிறேன்.
அனைத்து இடத்திலும் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றார்கள் மீனவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். உப்பளத்தில் வேலை செய்யும் பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.
தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்
சட்டமன்றத்திற்கு வெளியே பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இலங்கை தமிழர் மற்றும் தமிழ் மொழி மீது கேப்டன் விஜயகாந்த் சிறந்த பற்றுடன் இருந்தார். தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்று நான் செல்லும் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து கூறி வருகிறேன்.
தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆங்கிலத்தைவிட நமக்கு தமிழ் மொழிதான் முக்கியம். மக்கள் பிரச்சினைகள் குறித்து நான் பேச முன்வந்தபோது, சபாநாயகர் இன்னொரு நாளில் நீங்கள் பேசிக்கொள்ளுங்கள் என்று கூறினார். இன்று விவசாயிகள், நெசவாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் போராடி வருகின்றனர்.
சென்னை - திருச்சி மெட்ரோ ரயில் திட்டம் வர வேண்டும் என்பது குறித்து பேசலாம் என நினைத்தேன். ஆனால், இன்று பேச முடியவில்லை. நாளை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசலாம் என நினைக்கிறேன்” என தெரிவித்தார்.