கிறிஸ்தவமா... தமிழா?
கிறிஸ்தவமா... தமிழா? - வரலாறு சொல்லும் ஆச்சர்யமான உறவு!
- புதுமடம் ஜாபர் அலி
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு குறித்து ஏற்கெனவே சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், சட்டப்பேரவையில் நடந்த ஒரு விவாதம் அதற்கு வேறு பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறது. கடையநல்லூர் எம்.எல்.ஏ ராஜேந்திரன், “தமிழ் உச்சரிப்பில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்” எனச் சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த மரிய வில்சன், “நான் பிறப்பால் கிறிஸ்தவர். கிறிஸ்தவம் எனக்கு அன்பு, அமைதி, இரக்கம் ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்திருக்கிறது” என்றார். அத்துடன், “எவ்வளவு தமிழ் படித்தாலும், சிலருக்கு இந்தப் பண்புகள் தெரியவில்லை” என்ற பொருளிலும் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பாக, மதிப்பு வாய்ந்த சட்டசபை விவாதத்தின்போது, உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பொறுப்பாக பதிலளிக்கவேண்டிய அமைச்சர், கொஞ்சம் உரத்த குரலில், கோபத்தைக் காட்டிப் பேசியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் விமர்சனத்தைக் கடந்து, ‘கிறிஸ்தவத்துக்கும் தமிழுக்கும் என்ன உறவு?’ என்ற வரலாற்றுக் கேள்வியையும் எழுப்புகிறது. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், கிறிஸ்தவமும் தமிழும் முற்றிலும் எதிரெதிரான இரு உலகங்கள் அல்ல. கிறிஸ்தவத்தைச் சேர்ந்த பல அறிஞர்கள் தமிழைக் கற்று, தமிழிலேயே எழுதி, இலக்கியம், இலக்கணம், அகராதி, மொழிபெயர்ப்பு, அச்சு உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள்.
தமிழ் அச்சு வரலாற்றில் இதற்கான தொடக்ககாலச் சான்றுகளில் ஒன்று 1578-ல் வெளியான ‘தம்பிரான் வணக்கம்’. ஹென்றிக் ஹென்றிக்கஸ் உருவாக்கிய இந்த நூல், தொடக்ககாலத் தமிழ் அச்சு நூல்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிறிஸ்தவ போதனையைத் தமிழில் எடுத்துச் செல்லும் முயற்சி; தமிழ் அச்சுக் கலாசாரத்தின் வளர்ச்சியுடனும் இணைந்தது.
பின்னர் 1706-ல் தரங்கம்பாடிக்கு வந்த பார்த்தலோமியஸ் சீகன்பால்க், தமிழைக் கற்று தமிழ் நூல்களை ஆராய்ந்தார். பைபிளைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டார். அவரது முயற்சியின் தொடர்ச்சியாக 1715-ல் தமிழில் `புதிய ஏற்பாடு’ அச்சிடப்பட்டது. இது தமிழ் அச்சுத்துறையில் முக்கியமான திருப்பமாக அமைந்தது.
தமிழ் இலக்கிய உலகில் தனக்கென இடம்பிடித்தவர், `வீரமாமுனிவர்’ என அழைக்கப்படும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி. கிறிஸ்தவக் கருத்துகளை தமிழ்க் காப்பிய மரபில் வெளிப்படுத்திய அவரது ‘தேம்பாவணி’ முக்கியமான படைப்பாகும். தமிழ் இலக்கணம், அகராதி, உரைநடை ஆகிய துறைகளிலும் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஜி.யு.போப் திருக்குறள், திருவாசகம் உள்ளிட்ட தமிழ் செவ்வியல் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலக அளவில் அறிமுகப்படுத்தினார். ராபர்ட் கால்டுவெல், தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கண ஆய்வில் முக்கியப் பங்களிப்பைச் செய்தார். வேதநாயகம் சாஸ்திரியார், ஹென்றி ஆல்ஃபிரட் கிருஷ்ணப்பிள்ளை உள்ளிட்டோரும் தமிழ் கிறிஸ்தவ இலக்கியத்தை வளப்படுத்தினர். ஹெச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய ‘இரட்சணிய யாத்திரிகம்’ இதற்குச் சிறந்த உதாரணம்.
இதற்கிடையில், பைபிளின் தமிழாக்கத்தையும் இந்த விவாதத்தில் தனியாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. தமிழில் பைபிளை நன்றாகப் படித்து, அதன் பொருளை ஆழமாகப் புரிந்துகொள்வோரின் பேச்சிலும் எழுத்திலும் அதன் செழுமையான மொழிநடை, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சொற்செழுமை, உவமைகள், உருவகங்கள், நீதிக்கதைகள், அறக்கருத்துகள் எனப் பல்வேறு கூறுகளைக்கொண்ட பைபிளின் தமிழ், தமிழ் வாசகனின் மொழி உணர்வையும் வளப்படுத்தக்கூடியது. எனவே, கிறிஸ்தவத்தைப் பற்றிப் பேசும்போது, அதன் தமிழாக்கம் உருவாக்கியிருக்கும் மொழி வளத்தையும் அமைச்சர் கவனத்தில்கொள்ள வேண்டும்.
அதேசமயம், அன்பு, அமைதி, இரக்கம், மனிதநேயம் ஆகியவை கிறிஸ்தவத்துக்கு மட்டுமே உரித்தானவை அல்ல. தமிழ் மரபிலும் இத்தகைய அறக் கருத்துகள் சங்க இலக்கிய காலத்திலிருந்தே வலியுறுத்தப்பட்டுள்ளன. திருக்குறள் அறம், அன்பு, ஈகை, அருள் ஆகியவற்றை மனித வாழ்வின் அடிப்படையாக எடுத்துரைக்கிறது. ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’ என்று வள்ளுவர் கேட்பதும் இதையே உணர்த்துகிறது.
எனவே, இந்த விவாதத்தை ‘கிறிஸ்தவமா... தமிழா?’ என்ற போட்டியாக மாற்றுவது தேவையற்றது. கிறிஸ்தவ அறிஞர்கள் தமிழுக்குச் செய்த பங்களிப்பை மறுப்பது வரலாற்றுப் பிழை. அதேநேரத்தில், தமிழ் மரபில் ஏற்கெனவே வேரூன்றியிருந்த அன்பு, அறம், இரக்கம் போன்ற பண்புகளை ஒரு மதத்தின் தனிப்பட்ட கொடையாகக் கருதுவதும் முழுமையான வரலாற்றுப் பார்வையாகாது.கிறிஸ்தவமும் தமிழும் மோதவேண்டியவை அல்ல. கிறிஸ்தவர்கள் தமிழை வளப்படுத்திய வரலாறும் இருக்கிறது; தமிழ் மரபு மனிதநேயத்தைப் போற்றிய வரலாறும் இருக்கிறது. ஒன்றை மற்றொன்றுக்கு எதிராக நிறுத்தாமல், இரண்டும் ஒன்றோடு ஒன்று பயணித்த வரலாற்றைப் புரிந்துகொள்வதே உண்மையான தமிழ்ப்பார்வையும் வரலாற்றுப் பார்வையும் ஆகும்.