கம்பீர் மீது தமிழக வீரர் சரமாரி புகார்.. தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என கருத்து
கம்பீர் மீது தமிழக வீரர் சரமாரி புகார்.. தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என கருத்து
கொழும்பு: இலங்கை டெஸ்ட் தொடரின் போது தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பொறுப்புணர்வற்ற தன்மையை கடுமையாக இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சடகோபன் ரமேஷ்,விமர்சித்துள்ளார். இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே கம்பீர் ஊடகங்களைச் சந்திக்கிறார் என்றும், தோல்வி அடையும் போது மற்ற வீரர்களை அனுப்பி வைக்கிறார் என்றும் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
அதோடு, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வெற்றிக்குப் பிறகு, இந்திய டெஸ்ட் அணி குறித்து கம்பீர் தெரிவித்த கருத்துகளுக்கும் ரமேஷ் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "தரவரிசைகள் முக்கியமல்ல. நாம் இப்போது ஒரு மாற்றக் கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம், பத்திரிகையாளர்களுக்கும் வர்ணனையாளர்களுக்கும் இது நன்றாகவே தெரியும்.
சில சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், கடந்த ஆண்டு இங்கிலாந்து தொடருக்குப் பிறகு நாங்கள் மிகவும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். நாங்கள் சரியான திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்" என்று இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டுக்குப் பிறகு கம்பீர் கூறியிருந்தார்.
"முதல் டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு கம்பீர் செய்தியாளர் சந்திப்பிற்கு வந்தார். முந்தைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே அவர் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்பது நமக்குத் தெரியும். இல்லையெனில், அவர் வேறு யாரையாவது அனுப்பி வைப்பார். தரவரிசை முக்கியமில்லை என்றும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தடுமாறவில்லை என்றும் அவர் கூறுகிறார். இந்த இரண்டையும் எப்படி சொல்ல முடியும்?
தரவரிசையைக் கவனித்தால் மட்டுமே நாம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும். மேலும், சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இந்தியா தடுமாறி வருகிறது என்பது ஒட்டுமொத்த உலகத்திற்கும் தெரியும்" என்று கூறியுள்ளார்.
"தூங்குபவர்களைக் கூட எழுப்பி விடலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எப்போதும் எழுப்பவே முடியாது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என்ற மரத்திலிருந்து இந்தியாவால் கனியைப் பறிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏன், அந்த மரத்தின் அருகே செல்வதை விடுங்கள், இந்தியா அந்தத் தோட்டத்தில் கூட இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று ரமேஷ் சாடியுள்ளார்.